விக்கிலீக்ஸ் நிறுவுனரை வெளியேற அனுமதிக்குமாறு பிரித்தானியாவிடம் ஈக்குவடோர் கோரிக்கை

Sunday, May 21st, 2017

விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாங்கே ஈக்குவடோர் தூதரகத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கு அனுமதிக்க வேண்டும் என ஈக்குவடோர் சார்பில் பிரித்தானியாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தென் அமெரிக்காவில் ஜூலியன் அசாங்கே புகலிடம் பெற்றுக்கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் ஈகுவடோர் மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது, ஈக்குவடோர் வெளியுறவுத்துறை அமைச்சர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது, ஜூலியன் அசாங்கே மீதான பாலியல் துஷ்பிரயோக வழக்கு விசாரணையை கைவிடுவதாக ஸ்வீடன் அறிவித்துள்ள நிலையில், அவருக்கு எதிரான பிடியாணை இனி செல்லுபடி ஆகாது என்பதால் ஈக்குவடோர் தூதரகத்திலிருந்து அவர் வெளியேற முடியாது என்பதற்கு இனி எவ்வித காரணமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘ ஜூலியன் அசாங்கே விடயத்தில் சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமிருந்தும் சாதகமான செய்தியே வந்துள்ளது. எனினும் பிரித்தானியாவுக்கு சிறிய சட்ட சிக்கலை தீர்க்கவேண்டியுள்ளது. அதனை பிரித்தானியா விரைவில் தீர்க்க முடியும் என்று நினைக்கின்றேன். பிரித்தானியா அதனை சரிசெய்தவுடன் ஜூலியன் அசாங்கே ஈக்குவடோருக்கு செல்ல முடியும்’ என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஈக்குவடோர் தூதரகத்திலிருந்து அசாங்கே வெளியேறுவதற்கும் அவருடைய பிரச்சினை தீர்க்கப்படுவதற்கும் ஈக்குவடோர் வெளியுறவு அமைச்சு தேவையான அனைத்து இராஜதந்திர முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts: