வறுமையின் உச்சம் – மனைவியின் சடலத்தை 10 கி.மீ. தூரம் தோளில் தூக்கிசென்ற கணவர்!

Thursday, August 25th, 2016

ஒடிசாவில் சடலத்தை ஏற்றிச் செல்லும் வேன் மறுக்கப்பட்டதால் வறுமையால் பாதிக்கப்பட்ட நபர் 10 கிலோ மீட்டர் தூரம் மனைவியின் சடலத்தை தோளில் வைத்து தூக்கிசென்ற சம்பவம் நடைபெற்று உள்ளது.

ஒடிசாவின் பவானிபாட்னா பகுதியில் புதன்கிழமை காலையில் மக்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் ஒன்று நேரிட்டது, அது வறுமையினால் பாதிக்கப்பட்ட தானா மஜ்கி தன்னுடைய மனைவியின் சடலத்தை தூக்கிச் செல்லும் காட்சிதான். போர்வையால் சுற்றப்பட்ட சடலத்தை தானா மஜ்கி, தன்னுடைய 12 வயது மகளுடன் சேர்ந்து 10 கிலோ மீட்டர் தொலைவு தூக்கிசென்று உள்ளார்.

சடலத்தை எடுத்துச் செல்ல மருத்துவமனை அதிகாரிகள் பணம் கேட்டு உள்ளனர். ஆனால் தன்னிடம் பணம் கொடுக்கும் வசதியில்லை என்று தானா மஜ்கி கூறிஉள்ளார். இதனையடுத்து தன்னுடைய மனைவியின் சடலத்தை தானாகவே எடுத்துச் செல்ல தொடங்கிவிட்டார்.

ஒடிசா மாநிலம் காலாகாண்டி மாவட்டம் வறுமையினால் பாதிக்கப்பட்ட மிகவும் பின்தங்கிய மாவட்டம். இம்மாவட்டத்தில் உள்ள மெல்காராவே தானா மஜ்கியின் கிராமாகும். கிராமம் மருத்துவமனையில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 60 கிலோ மீட்டர் தொலைவும் சடலத்தை தானே எடுத்துச் செல்ல தானா மஜ்கி முயற்சி செய்து உள்ளார். 10 கிலோ மீட்டர் தொலைவு கடந்ததும் உள்ளூர் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இடைமறித்து, வேனில் எடுத்துச் செல்வதற்கு ஏற்பாடு செய்தனர்.

உள்ளூர் செய்தியாளர்களிடம் பேசிய மஜ்கி, “நான் மிகவும் ஏழ்மையானவன் என்றும் என்னால் பணம் கொடுக்க முடியாது என்றும் மருத்துவமனை அதிகாரிகளிடம் கூறினேன். ஆனால் அவர்கள் உதவிசெய்ய முடியாது என்று கூறிவிட்டனர்,” என்றார். மாநிலத்தில் ஏழைகளின் சடலங்களை எடுத்து உதவிசெய்யும் விதமாக நவீன் பாட்நாயக் அரசு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. செய்தியாளர்கள் மாவட்ட கலெக்டருக்கு அழைப்பு விடுத்து சடலத்தை வேனில் எடுத்துச் செல்ல உதவிசெய்தனர். பிஜு ஜனதா தளம் கட்சியின் எம்.பி. காலிகேஷ் சிங் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில்,

“இச்சம்பவத்தை ஆய்வு செய்யவும், சரியான நடவடிக்கை எடுக்கவும் மாநில மந்திரியிடம் கேட்டுக் கொண்டு உள்ளேன்,” என்று கூறிஉள்ளார்.

Related posts: