வரலாற்றை புரட்டி பார்த்துவிட்டு மோதுவது பற்றி யோசியுங்கள்- வியட்நாமிற்கு சீனா எச்சரிக்கை!

Thursday, August 11th, 2016

சர்ச்சைக்குரிய தென்சீன கடற்பகுதியில் வியட்நாம் தனது இராணுவத்தை நிறுத்தியிருப்பதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு:-

தற்போது வியட்நாம் தென் சீன கடற்பகுதியில் நிறுவியுள்ள புதிய மொபைல் ராக்கெட் லாஞ்சர்கள் சீனாவின் விமான ஓடுபாதைகளையும், ராணுவ நிலைகளையும் தாக்கும் வல்லமை கொண்டவை. சீனாவை குறி வைப்பதற்காகவே சமீபகாலமாக வியட்நாம் தனது ராணுவ நிலையை இப்பகுதியில் அதிகரித்து வருகிறது என தெரியவந்தால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு வியட்நாம் ஆளாக நேரிடும்.

வியட்நாம் செய்த மிகப்பெரிய தவறுகளில் ஒன்றாக இது மாறிவிடும். கடந்த காலங்களில் நடந்த போரில் வியட்நாம் தோல்வியுற்றதை மறந்திருக்க வாய்ப்பில்லை. வரலாற்றை மீண்டும் ஒருமுறை புரட்டி பார்த்து வியட்நாம் பாடங்களை கற்றுக்கொள்ளும் என சீனா நம்புகிறது.

இவ்வாறு அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சீனா கூறுவது போல தற்போது நிறுவப்பட்டுள்ள ஏவுகணைகள் அவ்வளவு வலிமையானதல்ல என்றும், தென் சீனக்கடல் பகுதியில் பதற்றம் ஏற்படாமல் இருப்பதற்காகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இராணுவம் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் வியட்நாம் வெளியுறவுத்துறை தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: