வத்திக்கானில் அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம்!

Saturday, September 3rd, 2016

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) வத்திக்கான் நகரில் நடக்கிறது.

20-ம் நூற்றாண்டில் உலக மக்களால் மிகவும் போற்றப்பட்டவர், அன்னை தெரசா. தனது வாழ்நாள் முழுவதையும் ஏழை, எளியவர்கள், நோயுற்றவர்களுக்காக அர்ப்பணித்துக் கொண்ட அவருடைய சேவை இன்றளவும் பாராட்டப்படுகிறது.

உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசாவுக்கு அவர் புரிந்த அற்புதங்களை அங்கீகரிக்கும் விதமாக ரோம் நகரில் உள்ள வத்திக்கான் புனித பீட்டர் சதுக்கத்தில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) புனிதர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

அப்போது போப் ஆண்டவர் பிரான்சிஸ், அன்னை தெரசாவை புனிதர் பட்டம் பெற்றவராக அறிவித்து சிறப்பு செய்கிறார். இந்த விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து தலைவர்கள், பேராயர்கள், பக்தர்கள் என லட்சக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.

1910-ம் ஆண்டு அல்பேனிய பெற்றோருக்கு பிறந்த அன்னை தெரசா 1929-ம் ஆண்டு அயர்லாந்தின் லொராட்டா சகோதரிகள் சபையின் ஆசிரியையாக இந்தியாவின் டார்ஜிலிங் நகருக்கு பணிபுரிய வந்தார். கன்னியாஸ்திரியான அவர் அதில் பல வருடங்கள் பணியாற்றினார். பின்னர், அன்னை தெரசா 1950-ல் மிஷனரிஸ் ஆப் சாரிட்டிஸ் என்னும் சேவை அமைப்பை கொல்கத்தாவில் தொடங்கினார்.

இந்த அமைப்புக்கு இன்று 133 நாடுகளில் கிளைகள் உள்ளன. 5 ஆயிரம் பேர் இதில் பணிபுரிகின்றனர். ஏழை, எளியவர்கள் மற்றும் எச்.ஐ.வி., எய்ட்ஸ், தொழுநோய், காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்னை தெரசாவின் சேவை 47 ஆண்டுகள் தொடர்ந்தது. 1997-ம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் திகதியன்று இறுதி மூச்சு நிற்கும் வரை அன்னை தெரசா, தன்னை சேவையில் ஈடுபடுத்திக் கொண்டார்.

அவருடைய நினைவு தினத்தையொட்டித்தான் அவருக்கு புனிதர் பட்டம் அளிக்கும் விழா வத்திக்கான்நகரில் நடக்கிறது.

BRAND_BIO_Bio-Shorts_Mother-Teresa-Mini-Biography_0_172237_SF_HD_768x432-16x9

Related posts: