வட கொரியா நீர் மூழ்கி கப்பலில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை

Monday, April 25th, 2016

உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், சர்வதேச உடன்படிக்கைகளை புறக்கணித்து வடகொரியா 2006–ம் ஆண்டு முதல் தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது.

3 முறை அணு குண்டுகளை வெடித்து சோதித்த அந்த நாடு, கடந்த ஜனவரி மாதம் 6–ந் தேதி அதிரடியாக அணு குண்டை விட அதி பயங்கர சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்தது. இதற்காக உலக நாடுகள், வடகொரியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன.

மேலும், பிப்ரவரி மாதம் 7–ந் தேதி செயற்கைக்கோள் ஒன்றை ராக்கெட் மூலம் விண்வெளியில் ஏவியதாக வடகொரியா அறிவித்தது. ஆனால் அது ராக்கெட் சோதனை என்று கருதப்பட்டு, அதற்கும் உலக நாடுகளின் கண்டனங்கள் குவிந்தன.

ஆனால் வடகொரியா அதற்கும் அசரவில்லை. அது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளில் பொருத்துகிற சிறிய அளவிலான அணுகுண்டுகளையும் தயாரித்திருப்பதாக அறிவித்து உலக அரங்குக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்தது.

கடந்த சில தினங்களுக்கு முன் மீண்டும் அணு குண்டு சோதனை நடத்தப்போவதாக அந்த நாடு அறிவித்தது.தொடர்ந்து இது போல் சோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது.

இந்த நிலையில் நீர் மூழ்கி கப்பலில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

இது குறித்து வடகொரிய அரசால் நடத்தப்படும் கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீர்மூழ்கி கப்பலிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை சோதனையை அதிபர் கிம் நேரில் பார்வையிட்டு உறுதிசெய்தார்.

மேலும் தென்கொரியாவும் அமெரிக்காவும் தங்களுக்கு எதிராக செயல்பட்டால், அவற்றைத் தாக்கும் திறன் வடகொரியாவுக்கு இருக்கிறது என்றும் கிம் தெரிவித்தார் எனகூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,ஜப்பான் கடல் பகுதியிலிருந்தபடி ஏவப்பட்ட அந்த ஏவுகணை வெறும் 30 கி.மீ. தூரம் மட்டுமேபறந்து சென்றதால், அது தோல்வியடைந்திருக்கும் என்று தென்கொரியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணை சோதனைக்கு, அமெரிக்காவும், தென் கொரியாவும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தென் கொரியாவுடன், அமெரிக்கா நடத்தி வரும் கூட்டு போர் பயிற்சியை நிறுத்தினால், அணு ஆயுத சோதனையை கைவிட நாங்களும் தயார் என, வடகொரியா அதிபர் தெரிவித்துள்ளார்.

Related posts: