வடகொரியாவிற்கு ஆதரவாக பிரித்தானியா?

Tuesday, April 18th, 2017

வடகொரியா விடயத்தில் இனியும் பொறுமைகொள்ள முடியாது என அமெரிக்காவின் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரியா தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், வடகொரியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளை பிரிக்கும் இராணுவ வலயத்திற்கு மைக் பென்ஸ் விஜயம் மேற்கொண்டுள்ளார். வட கொரியா கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏவுகணை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், அந்த சோதனை நடவடிக்கை தோல்வியடைந்திருந்தது.

எனினும், வட கொரியாவிற்கு எதிராக தயாராகும் நோக்கில் அமெரிக்கா மற்றும் தென் கொரியா நேற்றைய தினம் இராணுவ ஒத்திகை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், கொரிய யுத்தத்தின் போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட “பான்முன்ஜோம்” கிராமத்திற்கு வியஜம் மேற்கொண்டிருந்த மைக் பென்ஸ்,”பேச்சு வார்த்தைகள் ஊடாகவே கொரிய தீபகற்பத்தில் அமைதியை காண அமெரிக்கா விரும்புகின்றது. அதற்கான சாத்தியகூறுகள் தொடர்பில் ஆராயப்படும்.

மூலோபாய தந்திர ரீதியில் அமைதி காக்கும் காலம் ஒன்று இருந்தது. எனினும், அந்த அமைதி காக்கும் காலம் முடிவடைந்துள்ளதாக” மைக் பென்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதேவேளை, உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டுள்ள நிலையில் அந்த நாட்டிற்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது.எனினும், கடந்த ஆறு ஆண்டுகளாக வடகொரியாவிற்கு பிரித்தானியா 4 மில்லியன் பவுண்டிற்கு மேற்பட்ட நிதியை வழங்கியுள்ளதாக தெரிவித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள.

“கடந்த 2015ஆம் ஆண்டில் மாத்திரம் 7,40,000 பவுண்ட் நிதி வட கொரியாவிற்கு” வழங்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வட கொரியாவின் வளர்ச்சி திட்டங்களுக்காகவும், இரு நாட்டு உறவினை பலப்படுத்திக்கொள்ளும் வகையிலும் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. இந்நிலையில், பிரித்தானிய அரசின் இந்த நடவடிக்கைக்கு அந்நாட்டின் முன்னாள் இராணுவ அமைச்சர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், வட கொரியாவிற்கு நேசகரம் நீட்டும் தமது கொள்கையை மாற்றிக்கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை என பிரித்தானியா அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதேவேளை, உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் வட கொரியாவிற்கு பிரித்தானியா நிதியுதவி வழங்குவது கண்டனத்திற்குரியது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts: