தி.மு.க.வுடன் காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை :கருணாநிதியை குலாம் நபி ஆசாத் சந்திக்கிறார்

Friday, March 25th, 2016

தி.மு.க.வுடன் காங்கிரஸ் கட்சி இன்று (25) தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையிலீடபடவுள்ளது. இதுதொடர்பாக கருணாநிதியை குலாம் நபி ஆசாத் இன்று சந்திக்கிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேசுவதற்காக காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி, தேசிய செயலாளர் சு.திருநாவுக்கரசர், முன்னாள் எம்.எல்.ஏ. டி.யசோதா, கோபிநாத், தனுஷ்கோடி ஆதித்தன், ஏ.பி.சி.வி.சண்முகம் ஆகிய 8 பேர் அடங்கிய குழுவை நியமித்தார். இந்த குழுவினர் தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஆயத்தமாக உள்ளனர்.

தி.மு.க. கூட்டணியில் எத்தனை தொகுதிகள் கேட்கலாம்? எந்தெந்த தொகுதிகளை பெறலாம்? தங்கள் ஆதரவான தொகுதிகள் எவை? என்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி உள்ளனர்.

இந்தநிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான குலாம் நபி ஆசாத், தேசிய பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று(வெள்ளிக்கிழமை) காலை சென்னை வருகின்றனர். தி.மு.க. தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசுகின்றனர்.

இந்த சந்திப்புக்கு பின்னர் தி.மு.க. தொகுதி பங்கீடு குழுவை சேர்ந்த தி.மு.க.பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, தலைமை நிலைய செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரை காங்கிரஸ் தொகுதி பங்கீடு குழுவினர் சந்தித்து பேச்சுவார்த்தையை தொடங்குவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள்? என்பது இன்றே இறுதி செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறும்போது, ‘தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது இன்று அல்லது நாளை முடிவு செய்யப்பட்டு விடும். காங்கிரசுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கருணாநிதியை இன்று சந்திப்பதற்கு குலாம் நபி ஆசாத் நேரம் கேட்டு இருக்கிறார்.’ என்றார்.

Related posts: