வங்கதேசத்தில் நாளை தேர்தல் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Saturday, December 29th, 2018

வங்கதேசத்தில் நாளை(30) பொதுத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, அந்த நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கட்சிகளின் தேர்தல் பிரசாரம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலில், தேர்தலுக்கு 48 மணி நேரத்துக்கு முன்னதாக சட்டம், ஒழுங்கைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக துணை ராணுவப் படையினரும், காவல் துறையினரும் நாடு முழுவதும் குவிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் நூருல் ஹூடா வெள்ளிக்கிழமை கூறியதாவது:

வாக்காளர்கள் தாங்கள் விரும்பிய வேட்பாளர்களுக்கு சுதந்திரமாக வாக்களித்துவிட்டு, பாதுகாப்புடன் வீட்டுக்குத் திரும்பிச் செல்வதை பாதுகாப்புப் படையினர் உறுதி செய்ய வேண்டும்.

தேர்தல் பணிக்காக விடுக்கப்பட்டுள்ள அழைப்பை ஏற்று, ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் நாடு முழுவதும் முகாம் அமைத்துள்ளனர்.

மதவாத அமைப்புகளிடம் பாதுகாப்புப் படையினர் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றார் அவர்.

ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ள முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் கலீதா ஜியா போட்டியிட முடியாத நிலையில் இந்தத் தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Related posts: