மொசூல் யுத்தத்தால் 10000க்கும் அதிகமானோர் வெளியேற்றம்!

Friday, October 28th, 2016

இஸ்லாமிய தேசம் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் குழுவிடம் இருந்து மொசூல் நகரை மீட்பதற்கான இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதுமுதல் 10,000க்கும் அதிகமான ஈராக்கியர் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக ஐ.நாவை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது.

எனினும் தற்போதைய இடம்பெயர்வு எண்ணிக்கை குறைவானதாக பார்க்கப்படுவதோடு ஈராக்கிய படையினர் நகரின் எல்லைக்குள் நுழையும்போது மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இடம்பெயர முயற்சிப்பார்கள் என்று உதவிக் குழுக்கள் எதிர்பார்க்கின்றன.

மக்கள் வாழும் பகுதியில் மோதல் நெருங்கும்போது மேலும் மேலும் குடும்பங்கள் மோதலில் இருந்து தப்பிக்க வெளியேறுவதை காண முடியுமாக இருக்கும் என்று அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.இதில் குறைந்தது 1,000 பேர் வரை ஈராக் தீவிரவாத தடுப்பு படையினரால் அவர்களின் கிராமத்தில் இருந்து மீட்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அப்புறப்படுத்தப்பட்டவர்கள் அருகில் இருக்கும் தற்காலிக முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

எனினும் மக்கள் வெளியேறுவதற்கு வசதியாக மனிதாபிமான பாதைகள் ஏற்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலானவர்கள் கால் நடையாகவே நீண்ட பயணம் மேற்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

ஈராக்கின் இரண்டாவது மிகப்பெரிய நகரான மொசூலை மீட்கும் படை நடவடிக்கை கடந்த ஒக்டோபர் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. ஈராக்கிய இராணுவத்துடன் குர்திஷ் பெஷ்மர்கா படையினர், சுன்னி பழங்குடியினர், ஷியா போராளிகள் இந்த தாக்குதலில் பங்கேற்றிருப்பதோடு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை வான் தாக்குதல்களை நடத்தி உதவி புரிகிறது.

“தற்போது இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 10,500க்கும் அதிகம். அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன” என்று ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. கடந்த இரு தினங்களில் இடம்பெயர்வோரின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்திருப்பதோடு பெரும் எண்ணிக்கையானோர் கூட்டமாக வெளியேறுவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

“யுத்த முனைகளின் நடவடிக்கையால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட பின்னர் மக்கள் விரைவாக வீடுகளுக்கு திரும்புவது உட்பட மக்களின் நகர்வில் ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது” என்று ஐ.நா அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மொசூல் யுத்த கள விளிம்பு பகுதிகளில் முகாம்களை அமைப்பதற்கான உபகரணங்களை கொண்டு செல்வதில் தொண்டு அமைப்புகள் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. நகரின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகள் ஊடே ஐ.எஸ்ஸுக்கு எதிராக படை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.மொசூல் நகருக்குள் தொடர்ந்து 1.5 மில்லியன் மக்கள் வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது.

யுத்த களத்தில் ஐ.எஸ் பலமான எதிர்ப்பை வெளியிட்டு வருவது மோதல் மோசமான நிலையை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. எனினும் ஈராக்கிய இராணுவம் மற்றும் குர்திஷ் பெஷ்மர்கா படையினர் சுமார் 90 கிராமங்களை மீட்டுள்ளனர். கிழக்கு முனையில் இருந்து ஈராக்கிய துருப்புகள் மொசூல் நகரை 6 கிலோமீற்றருக்குள் நெருங்கியுள்ளன.மறுபுறம் வடகிழக்கில் பஷிகா நகரை ஒட்டி பஷ்மர்கா படையினர் யுத்தத்தில் அதிக கவனம் செலுத்தியுள்ளனர்.

d70c8b2af65a18e365463a5a27caac9e_L

Related posts: