முன்னாள் மாலைத்தீவு ஜனாதிபதி இங்கிலாந்தில் தஞ்சம்!

Tuesday, May 24th, 2016
மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமத் நசீத் அகதியாக இங்கிலாந்து நாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.

மொஹமத் நசீத் கடந்த 2008 ஆம் ஆண்டு மாலைத்தீவில் நடந்த பொதுத்தேர்தல் மூலம் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதியானார். கடந்த 2012 ஆம் ஆண்டு அங்கு நடைபெற்ற தேர்தலில் அப்துல்லா யாமீன் என்பவரிடம் நசீத் தோல்வியுற்றார்.

பின்னர் ஆட்சிக்கு வந்த அப்துல்லா யாமீன் தலைமையிலான அரசு, முன்னாள் அதிபர் நசீத் மீது பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்தது. தீவிரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நசீதுக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்த போது கடும் முதுகுவலி காரணமாக அவருக்கு தண்டு வடத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதற்காக இங்கிலாந்து சென்று சிகிச்சை பெற அப்துல்லா யாமீன் அரசிடம் அனுமதி கோரினார். இருப்பினும், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால், அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து, அவரை சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு அமெரிக்கா, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தின.

இதனையடுத்து, அவர் கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்து சென்றார். அங்கு அவருக்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கெமரூன் சிறப்பான வரவேற்பு அளித்தார். பின்னர் அறுவை சிகிச்சை முடிந்து உடல்நிலை தேறியதும் மாலைத்தீவிற்கு மீண்டும் திரும்ப நசீர் மறுத்து விட்டார்.

இதனையடுத்து, அவரது ஓய்வூதியம், மருத்துவ சலுகை உள்ளிட்டவற்றை மாலைத்தீவு அரசு முடக்கியது. இந்நிலையில், நசீதுக்கு தம் நாட்டில் அகதியாக தஞ்சம் அளித்துள்ளதாக இங்கிலாந்து அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

இதன் பின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முகமது நசீத், மாலைத்தீவின் தற்போதைய அதிபர் எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரையும் சிறையில் அடைத்து வைத்துள்ளதாகவும் அங்கு பத்திரிகை சுதந்திரம், கருத்து சுதந்திரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை சுதந்திரங்களும் பறிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இதனால் தாமும் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் நாடுகடந்து வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை என்றே கருதுவதாக நசீத் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: