முன்கூட்டியே தேர்தலுக்கு தயாராகும் ஆஸ்திரேலிய!
Tuesday, March 22nd, 2016
ஆஸ்திரேலியாவில் முன்னாள் பிரதமர் டோனி அபாட்டுக்கு கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கடந்த ஆண்டு அந்த பதவிக்கு வந்தவர் மால்கம் டர்ன்பல். ‘கன்சர்வேடிவ் லிபரல் தேசிய கூட்டணி’ சார்பில் பிரதமராக இருக்கும் அவருக்கு பாராளுமன்றத்தில் சிறிய கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சியினரால் மிகுந்த நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு சீர்திருத்த மசோதாக்களை அவரால் நிறைவேற்ற முடியவில்லை.
இதனால் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தலை நடத்த அவர் திட்டமிட்டு வரும் ஜூலை 2ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கூறிய மால்கம் டர்ன்பல், ‘அரசியல் நாடகங்கள் அனைத்தும் முடிவுக்கு வரும் நேரம் இது. செனட் சபையில் முட்டுக்கட்டைக்கு பதிலாக சட்டம் இயற்றுவதற்கு இது ஒரு சரியான வாய்ப்பு. முக்கியமான மசோதாக்களுக்கு தடைபோடும் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும்’ என்றார். ஆஸ்திரேலிய மக்களிடையே மால்கம் டர்ன்பல்லின் செல்வாக்கு தற்போது சரிந்து வருகிறது. இந்த நிலையிலும் முன்கூட்டிய தேர்தல் நடவடிக்கை அவரது துணிச்சலான முடிவாக கருதப்படுகிது.
தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி வரை இருப்பது குறிப்பிடத்தக்கது.
.
Related posts:
|
|
|


