முதல்வர் ஜெயலலிதா சிகிச்சையில் குழப்பம்!

Thursday, October 6th, 2016

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, எய்ம்ஸ் மருத்துவக் குழு நேற்று இரவு சென்னை வந்துள்ளது. ‘நேற்று முழுவதும் முதல்வர் உடல்நிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டதால், எய்ம்ஸ் மருத்துவக் குழு சிசிச்சை அளிக்க வந்துள்ளது’ என தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 15 நாட்களாக அப்போலோ மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நுரையீரல் தொற்றின் காரணமாக மூச்சுத் திணறல் உள்பட பல்வேறு சிரமங்களுக்கு ஆளானார். தற்போது செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 30-ம் தேதி லண்டனில் இருந்து வந்த சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் பெயல், நுரையீரல் தொற்றை சரிசெய்வதற்கான சிகிச்சையில் இறங்கினார்.

இலண்டனில் நடைபெறும் மருத்துவ மாநாட்டுக்கு அவர் சென்றுவிட்டதால், அவர் சார்பாக, இன்னொரு வெளிநாட்டு மருத்துவர் மருத்துமனையில் சிகிச்சைகைளை அளித்து வருகிறார். இந்நிலையில், நேற்று டெல்லி, எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து மூன்று பேர் கொண்ட மருத்துவக் குழு, அப்போலோ வந்துள்ளது.

“முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் தொடர் சிகிச்சையின் விளைவாக, சில பின்விளைவுகள் ஏற்பட்டுள்ளன. நேற்று காலையில் இருந்தே, மருத்துவர்கள் பதற்றமாக இருந்தனர். இதையடுத்தே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களின் உதவியை நாடியது அப்போலோ” என விவரித்த கார்டன் ஊழியர் ஒருவர், “செயற்கை சுவாசக் கருவி மூலம் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. அதில் திடீரென சின்ன சிக்கல். அதற்கு மாற்று ஏற்பாடு ஒன்றை செயல்படுத்தியுள்ளனர். அதோடு கை, கால்களின் இயல்பான இயக்கத்தில் சிரமங்கள் நீடிப்பதால், அவற்றை உடனடியாக குணப்படுத்த வேண்டிய நிர்பந்தமும் இருக்கிறது. கை, கால்களுக்குப் பயிற்சியளிக்க, புது இயந்திரம் ஒன்றை நேற்று வரவழைத்துள்ளனர்.

அவற்றின் உதவியோடு கை, கால்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக முதல்வரின் உடல்நிலையில் ஏற்ற, இறக்கமாகவே இருந்து வருகிறது. ரிச்சர்ட் பெயலின் மருத்துவ ஆலோசனைகள் மிக முக்கியமானதாக இருந்தாலும், உடல் உறுப்பு செயல்பாடுகளுக்கு சிறப்பு நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் தேவைப்பட்டார்கள். இதையடுத்தே, டெல்லி எய்ம்ஸில் இருந்து மருத்துவர்களை வரவழைத்தது அப்போலோ. இந்தக் குழுவில், நுரையீரல் சிகிச்சை மருத்துவர் கில்னானி, டாக்டர் அஞ்சன் திரிக்கா, இதயநோய் சிகிச்சை வல்லுநரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மருத்துவருமான நிதிஷ் நாயக் உள்ளிட்ட மூன்று பேர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

முதல்வருக்கு இதுவரையில் அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளை நேற்று இரவு கேட்டு அறிந்தனர். அடுத்து செய்ய வேண்டிய மருத்துவ வழிமுறைகள் குறித்து மருத்துவர் கில்னானி ஆலோசனை நடத்தி வருகிறார். முதல்வரின் உடல் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கான, ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகள் பற்றிய ஆலோசனையும் தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் ரிச்சர்ட் பெயலும் வர இருக்கிறார்” என விவரித்து முடித்தார்.

jaya6003

Related posts: