மத்தியஸ்தம் செய்ய தயார்!- பான் கீ மூன்!

Sunday, October 2nd, 2016

இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் அறிவித்துள்ளார்.

இருதரப்பு போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இது ஒருபுறம் இருக்க இன்னொரு புறம் பயங்கரவாதிகளை, இந்தியாவில் ஊடுருவி தாக்குதல் நடத்த செய்கிறது.

இப்படி பாகிஸ்தான் மறைமுகப்போரில் ஈடுபட்டு வருவது இந்தியாவில் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தி வருகிறது.கடந்த மாதம் 18-ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உரி ராணுவ முகாமில் நுழைந்து நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் இந்திய வீரர்கள் 19 பேர் கொல்லப்பட்டனர்.

அதன் சுவடுகள் மறைவதற்கு முன்பே, மறுபடியும் காஷ்மீரிலும், இந்திய நகரங்களிலும் தாக்குதல் நடத்துவதற்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகள், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே முகாமிட்டு சதி செய்த தகவல் வந்ததால், இந்தியா அதிரடியாக இராணுவத்தை அங்கு களமிறக்கி துல்லியமான தாக்குதல்கள் தொடுத்தது.அதில் 7 முகாம்கள் நிர்மூலமாக்கப்பட்டதுடன், 38 பயங்கரவாதிகளும், 2 சிப்பாய்களும் கொல்லப்பட்டனர்.இதையடுத்து இந்திய, பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் நீடிக்கிறது.

எல்லையோர கிராம மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். இது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்த நிலையில், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க தான் மத்தியஸ்தம் செய்வதற்கு தயார் என ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் முன்வந்துள்ளார்.

இது தொடர்பாக அவரது செய்தித் தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சமீப கால நிகழ்வுகளால், குறிப்பாக எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், உரியில் அமைந்துள்ள இந்திய இராணுவ முகாமில் செப்டம்பர் 18-ந் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை தொடர்ந்து, போர் நிறுத்தம் மீறப்பட்டு வருகிறது.மேலும், இரு நாடுகள் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பொதுச்செயலாளர் மிகவும் கவலை கொண்டுள்ளார்.இரு தரப்பினரும் அதிகபட்ச அளவு கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும், பதற்றத்தை தணிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுச் செயலாளர் கேட்டுக்கொள்கிறார்.

இரு தரப்பினரும் சம்மதம் தெரிவித்தால், காஷ்மீர் பிரச்சினை உள்ளிட்ட நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகளிலும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண மத்தியஸ்தம் செய்வதற்கு பொதுச் செயலாளர் தயாராக இருக்கிறார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே பாகிஸ்தான் இராணுவ மந்திரி கவாஜா ஆசிப், அந்த நாட்டின் டெலிவிஷன் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது, பாகிஸ்தான் ஒன்றும் ஷோகேஸ் பெட்டியில் (காட்சி பெட்டியில்) வைப்பதற்கு அணு குண்டு செய்து வைத்திருக்கவில்லை. சூழல் ஏற்பட்டால், அதை பயன்படுத்தி இந்தியாவை அழிப்போம்” என ஆவேசத்துடன் கூறினார்.

இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சக்தியை பெற்றிருக்கிற நாடுகளுக்கு மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டிய கடமை உண்டு.பாகிஸ்தான் இப்படிப்பட்ட பேச்சை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர் வலியுறுத்தியுள்ளார்.

ban-ki-moon-544d

Related posts: