மகுடம் யாருக்கு?

Thursday, May 19th, 2016

தமிழக சட்டசபைக்கு இதுவரை நடைபெற்ற 10 தேர்தல்களில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் நேரடியாக மோதி உள்ளன. அதில் அ.தி.மு.க. 6 முறையும், தி.மு.க. 3 முறையும் ஆட்சியை பிடித்துள்ளன.

இந்த தேர்தலில் வெற்றி பெற்று மகுடம் சூடப்போவது யார்? என்பது இன்றைய தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவரும்.இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வெற்றி பெற்று வந்தது.

இந்த வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது, அண்ணா தலைமையிலான தி.மு.க. தான்.கடந்த 1967-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. 174 தொகுதிகளில் போட்டியிட்டு, 137 இடங்களில் வென்று முதன் முதலில் ஆட்சியை பிடித்தது.

அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 232 தொகுதிகளில் போட்டியிட்டு 51 தொகுதிகளில் வென்றது. இந்த தேர்தலில் காமராஜர் விருதுநகர் தொகுதியில் 1,285 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இந்த தேர்தலில் தான் எம்.ஜி.ஆர். முதன் முதலில் தேர்தல் களம் கண்டார். அவர் தி.மு.க. வேட்பாளராக பரங்கிமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

முதல்-அமைச்சராக அண்ணா 1967-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ந் தேதி பொறுப்பேற்றார். ஆனால் அவர் 1969-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ந் தேதி மரணம் அடைந்ததை தொடர்ந்து, முதல்-அமைச்சராக முதல் முறையாக கருணாநிதி பொறுப்பேற்றார்.

அதன்பின் தமிழக சட்டசபைக்கு 1971-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தி.மு.க. 203 இடங்களில் போட்டியிட்டு, 184 இடங்களில் வென்றது.

201 தொகுதிகளில் போட்டியிட்ட காமராஜர் தலைமையிலான பழைய காங்கிரஸ் (ஸ்தாபன காங்கிரஸ்) கட்சி வெறும் 15 இடங்களில் வென்றது.

சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாநிதி 2-வது முறையாக மீண்டும் முதல்-அமைச்சர் ஆனார்.

முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதிக்கும், எம்.ஜி.ஆருக்கும் 1972-ம் ஆண்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. என்ற புதிய கட்சியை அதே ஆண்டு தொடங்கினார்.

அவரது கட்சி முதன் முதலின் 1973-ம் ஆண்டு நடந்த திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது.

அதே ஆண்டில் கோவை சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. இதுவே தமிழக சட்டசபையில்அ.தி.மு.க.விற்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.

இந்த சூழ்நிலையில் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு 1976-ம் ஆண்டு கலைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 1977-ம் ஆண்டு தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் இருந்து அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் நேரடி மோதலில் ஈடுபட்டு வருகின்றன. 1977-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. 200 இடங்களில் போட்டியிட்டு, 130 இடங்களில் வெற்றி பெற்றது.

எம்.ஜி.ஆர். முதல் முறையாக முதல்-அமைச்சர் ஆனார். கருணாநிதி தலைமையிலான தி.மு.க. 230 இடங்களில் போட்டியிட்டு 48 இடங்களில் வென்றது.

எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த போது, 1980-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் எம்.ஜி.ஆர். மத்தியில் ஆண்ட ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்தார்.

இந்திராகாந்தியின் காங்கிரஸ் கட்சி, தி.மு.க. பக்கம் சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது. அதில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி, தமிழகத்தில் மொத்தமுள்ள 39 இடங்களில் 37 இடங்களில் வெற்றி பெற்றது.

எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. வெறும் 2 இடங்களில் தான் வெற்றி பெற்றது. நாடு முழுவதும் பெரும்பான்மை பெற்ற காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது.

பிரதமராக பொறுப்பேற்ற இந்திராகாந்தி, தமிழகத்தை ஆட்சி செய்த எம்.ஜி.ஆர். ஆட்சியை கலைத்தார்.இதனால் 1982-ம் ஆண்டு நடக்க வேண்டிய தமிழக சட்டசபை தேர்தல் முன்கூட்டியே 1980-ம் ஆண்டே நடந்தது.

இந்த தேர்தலில் 177 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. 129 இடங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சர் ஆனார்.

112 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 37 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி ஆனது. அந்த தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 31 இடங்களில் வென்றது.

பிரதமராக இருந்த இந்திராகாந்தி 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார். எனவே இடைக்கால பிரதமராக பொறுப்பேற்ற ராஜீவ்காந்தி, உடனடியாக பாராளுமன்ற தேர்தலை நடத்த முடிவு செய்தார்.

அந்த சமயத்தில் எம்.ஜி.ஆர். உடல்நலக்குறைவு ஏற்பட்டு அமெரிக்காவிற்கு சிகிச்சைக்கு சென்றார். அப்போது ராஜீவ்காந்தியுடன் இணக்கத்தை ஏற்படுத்திய அ.தி.மு.க அரசு, தமிழக சட்டசபையை கலைத்து விட்டு, பாராளுமன்ற தேர்தலுடன் இணைந்து தமிழக சட்டசபை தேர்தல் நடத்த பரிந்துரை செய்தது.

அதனை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. தமிழக சட்டசபை கலைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 1984-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் ராஜீவ்காந்தியின் காங்கிரஸ் கட்சியும், அ.தி.மு.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதில் 155 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. 132 இடங்களில் வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். 3-வது முறையாக முதல்-அமைச்சர் ஆனார்.

காங்கிரஸ் கட்சி 73 இடங்களில் போட்டியிட்டு 61 இடங்களில் வென்றது. தி.மு.க. 167 இடங்களில் போட்டியிட்டு 24 இடங்களில் மட்டுமே வென்றது.

1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் எம்.ஜி.ஆர். மரணம் அடைந்தார். அதன்பின் ஜானகி அம்மாள், 1988-ம் ஆண்டு ஜனவரி 7-ந் தேதி முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார்.

ஆனால் அ.தி.மு.க பிளவுபட்டதால் அவர் வெறும் 23 நாட்கள் மட்டுமே முதல்-அமைச்சராக இருந்தார். ஜனவரி 30-ந் தேதி அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. அதன்பின் ஓராண்டுக்கு கவர்னர் (அலெக்சாண்டர்) ஆட்சி நடந்தது.

1989 ஜனவரியில் தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. அதில் ஜெயலலிதா அணி-ஜானகி அணி என அ.தி.மு.க. இரண்டாக பிரிந்து தேர்தலை சந்தித்தது.

அ.தி.மு.க. ஜெயலலிதா அணி சேவல் சின்னத்தில் 198 இடங்களில் போட்டியிட்டு 27 இடங்களில் வென்றது. அதில் போடிநாயக்கனூர் தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்ட ஜெயலலிதா வெற்றி பெற்றார்.

ஜானகி அணி இரட்டை புறா சின்னத்தில் 175 இடங்களில் போட்டியிட்டு ஒரே ஒரு இடத்தில் வென்றது. ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்ட ஜானகி, தோல்வி அடைந்தார்.

அந்த தேர்தலில் தி.மு.க. 202 இடங்களில் போட்டியிட்டு, 150 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கருணாநிதி 3-வது முறையாக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார்.

ஆனால் இந்த முறையும் கருணாநிதி முழுமைக் காலமும் ஆட்சி செய்யவில்லை. அவரது ஆட்சியை 1991-ம் ஆண்டு ஜனவரி 30-ந் தேதி மத்தியில் ராஜீவ்காந்தி ஆதரவில் சந்திரசேகர் தலைமையில் செயல்பட்ட அரசு கலைத்து விட்டது.

அதன்பின் தமிழகத்திற்கு மீண்டும் அதே ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த முறை அ.தி.மு.க. ஜெயலலிதா தலைமையில் ஒன்று பட்டது. ராஜீவ்காந்தியின் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார், ஜெயலலிதா.

இந்த தேர்தலில் 168 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க. 164 இடங்களில் வெற்றி பெற்று ஜெயலலிதா முதல் முறையாக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார்.

கூட்டணி கட்சியான காங்கிரஸ் 65 இடங்களில் போட்டியிட்டு 60 இடங்களை வென்றது. தி.மு.க. 176 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 2 இடங்களில் வென்றது.

அதன்பின் 1996-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. அதில் 182 தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. 173 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கருணாநிதி 4-வது முறையாக முதல்-அமைச்சர் ஆனார்.

168 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. 4 இடங்களில் மட்டுமே வென்றது. ஜெயலலிதா பர்கூர் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சுகவனத்திடம் 8,366 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

2001-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 141 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க. 132 இடங்களில் வென்றது. முதல்-அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றார். தி.மு.க. 183 இடங்களில் போட்டியிட்டு 31 இடங்களில் மட்டுமே வென்றது.

2006-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. காங்கிரஸ் கட்சி கூட்டு சேர்ந்து போட்டியிட்டது. தி.மு.க. 132 இடங்களில் போட்டியிட்டு 96 இடங்களில் வென்றது.

காங்கிரஸ் கட்சி 48 இடங்களில் போட்டியிட்டு 34 இடங்களில் வெற்றி பெற்றது. எனவே காங்கிரஸ் ஆதரவுடன் தி.மு.க. ஆட்சி அமைத்தது.

கருணாநிதி 5-வது முறையாக முதல்-அமைச்சர் ஆனார். 188 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க. 61 இடங்களில் வென்றது.
2011-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க- தே.மு.தி.க-கம்யூனிஸ்டு கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது.

அதில் அ.தி.மு.க. 165 தொகுதிகளில் போட்டியிட்டு 150 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா முதல்-அமைச்சர் ஆனார்.

தே.மு.தி.க. 41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்று 2-ம் இடத்தை பிடித்தது. விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் ஆனார். 124 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 23 இடங்களில் வெற்றி பெற்றது.

கடந்த கால வரலாற்றுப்படி, அ.தி.மு.க.வும்- தி.மு.க.வும் 10 சட்டசபை தேர்தலில் (கடந்த 16-ம் திகதி நடந்த தேர்தல் உள்பட) நேரடியாக மோதி உள்ளன.

அதில் அதிகபட்சமாக அ.தி.மு.க. 6 முறையும், தி.மு.க. 3 முறையும் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த தேர்தலில் மகுடம் சூடப்போவது யார் என்று, இன்று மதியத்துக்குள் தெரிந்து விடும்.

(நன்றி இணையம்)

Related posts: