பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி கைது!
Saturday, March 23rd, 2019
ஊழல் வழக்கு தொடர்பில் பிரேசில் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மிச்சல் டெமர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரேசிலில் 2016 முதல் 2018 வரை ஜனாதிபதியாக இருந்தவர் மிச்சல் டெமர் (வயது 47). இவர் தன்னுடைய பதவி காலத்தில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, மிச்சல் டெமர் மீதான ஊழல் வழக்குகள் குறித்து விசாரிக்க மார்சிலோ பிரெட்ஸ் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், அணுசக்தி ஆலை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு ஒதுக்கி 2 லட்சத்து 62 ஆயிரம் அமெரிக்க டொலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 கோடியே 80 லட்சம்) லஞ்சம் பெற்ற வழக்கில் மிச்சல் டெமரை பொலிசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
மேலும் இதே வழக்கில் மிச்சல் டெமரின் மந்திரி சபையில் நிலக்கரி மற்றும் எரிசக்தித்துறை மந்திரி பதவி வகித்த மோரிரா பிராங்கோ, டெமரின் நெருங்கிய நண்பரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான லீமா பில்கோ ஆகியோர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதனிடையே டெமருக்கு முன் பிரேசில் ஜனாதிபதியாக பதவி வகித்த லூயிஸ் இனாசியோ, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது 12 ஆண்டு சிறைவாசம் அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


