பிரித்தானிய வெளியுறவு அமைச்சரானார் போரிஸ் ஜான்சன்!

Thursday, July 14th, 2016

பிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்றிருக்கும் தெரீசா மே தனது புதிய அமைச்சரவையை நியமித்திருக்கிறார்.

லண்டனின் முன்னாள் மேயரும், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும் என்று வலியுறுத்திப் பிரசாரம் செய்தவருமான, போரிஸ் ஜான்சன் புதிய அமைச்சரவையில் பிரித்தானிய வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

பிரித்தானிய நிதியமைச்சராக இருந்த ஜார்ஜ் ஆஸ்போர்ன் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக புதிய நிதியமைச்சராக, ஏற்கனவே வெளியுறவு அமைச்சராக இருந்த பிலிப் ஹேமண்ட் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மைக்கேல் ஃபேலோன் பாதுகாப்பு அமைச்சராகத் தொடர்கிறார். லியாம் ஃபாக்ஸ் சர்வதேச வர்த்தக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டேவிட் டேவிஸ், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டியது தொடர்பான விஷயங்களுக்காகப் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் போரிஸ் ஜான்சன், ஐரோப்பாவுக்கும் உலகின் பிற நாடுகளுக்குமிடையே உள்ள உறவை மீண்டும் புதிய விதத்தில் வடிவமைக்க பிரித்தானியாவுக்கு இப்போது ஒரு பெரும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றார்.

கேமரனுக்கு நெருக்கமானவராகக் கருதப்பட்ட, பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜார்ஜ் ஆஸ்ஃபோர்ன் , தனது பதவி நீக்கம் குறித்து ட்விட்டர் மூலம் தெரிவித்த கருத்துக்களில், இந்தப் பதவியில் பணிபுரிந்ததை ஒரு கௌரவமாகக் கருதுவதாகவும், தனது செயல்பாடு குறித்து மற்றவர்கள் முடிவு செய்வார்கள் என்றும், ஆனால் தான் வந்தபோது இருந்ததை விட, பிரித்தானிய பொருளாதாரத்தை நல்ல நிலையில் விட்டுச் செல்வதாகவே தான் கருதுவதாகவும் கூறியிருக்கிறார்.

160713204541_boris_johnson__640x360_epa_nocredit

Related posts: