தாய்வானை அழைத்த விவகாரம் : அமெரிக்கா மீது சீனா மீண்டும் கடும் விமர்சனம்!

Thursday, May 18th, 2023

ஜெனிவாவில் எதிர்வரும் 21 முதல் 30 ஆம் திகதி வரை நடைபெறும் வருடாந்த கூட்டத்தில் தாய்வானை பார்வையாளராக அழைக்க, உலக சுகாதார நிறுவனத்தை அமெரிக்கா ஊக்குவித்து வருவதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளமையை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது.

2017ஆம் ஆண்டு முதல் உலக சுகதார நிறுவனத்தின் வருடாந்த அமர்வில் தாய்வான் பங்கேற்பதை பீஜிங் தடுத்துள்ளது. தாய்வானைத் தனிமைப்படுத்தும் ஒரு இராஜதந்திர நகர்வாகவே சீனா இதனை முன்னெடுத்தது.

இந்நிலையில், தாய்வானை ஒரு பார்வையாளராக அழைப்பது, சர்வதேச சுகாதார ஒத்துழைப்புக்கான ‘அனைவருக்கும் ஆரோக்கியமான’ அணுகுமுறைக்கான உலக சுகாதார நிறுவனத்தின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது என்று அண்டனி பிளிங்கன் தெரிவித்தார்.

அத்துடன், தாய்வானின் வெளிவிவகார அமைச்சும் உலக சுகாதார நிறுவனத்தின் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கான அமெரிக்காவின் அழைப்பு மற்றும் வலுவான ஆதரவிற்கு நன்றி தெரிவித்தது.

இந்நிலையில் பீஜிங்கின் ஆட்சேபனைகள் காரணமாக பெரும்பாலான உலகளாவிய அரங்குகளில் இருந்து விலக்கப்பட்ட தாய்வான், கொவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளிலும் தடுக்கப்பட்டது. இருப்பினும் உலக சுகதார நிறுவனத்தின் சில தொழில்நுட்ப கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில் சீனாவின் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் வாங் பீஜிங்கில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அமெரிக்காவின் கருத்துக்கள் பொதுமக்களை குழப்புவதாகவும், தாய்வான் தொடர்பான பிரச்சினைகளை வலுவாக்குவதாகும் குறிப்பிட்டதோடு உலக சுகதார நிறுவனத்தின் கூட்டத்திற்கு தாய்வானை அழைப்து பொருத்தமற்றது என்றும் வலியுறுத்தினார்.

அத்துடன் சர்வதேச அமைப்புகளின் செயற்பாடுகளில் தாய்வானின் பங்கேற்பானது ஒரு சீனா கொள்கையின்படி கையாளப்பட வேண்டும். ஒரு-சீனா கொள்கை, சீன-அமெரிக்க கூட்டு அறிக்கைகளின் விதிகளுக்கு அமெரிக்கா கட்டுப்பட வேண்டும். அதற்கு அமைவாக தாய்வானின் சுதந்திரத்தை ஆதரிக்கக்கூடாது என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: