பிரான்ஸின் புதிய ஜனாதிபதியாக இம்மானுவல் மேக்ரன்!

Monday, May 8th, 2017

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் மையவாத வேட்பாளரான இம்மானுவல் மேக்ரன் பெரும்பான்மையாக வெற்றி பெற்றிருப்பதாக கணிக்கப்பட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன.

தீவிர வலதுசாரி வேட்பாளர் மெரைன் லெபென்னை 39 வயதான மேக்ரன் 65.5 சதத்துக்கு 34.5 சதம் என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருப்பதாக முடிவுகள் காட்டுகின்றன.

கடந்த 1958-ம் ஆண்டு பிரான்ஸின் நவீன குடியரசு ஏற்படுத்தப்பட்டது முதல் இரண்டு பிரதான கட்சிகளைத் தாண்டி அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் வேட்பாளர் என்ற பெருமையையும் மேக்ரன் பெறுகிறார்.

தனது வெற்றி குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள மேக்ரன் பிரான்ஸ் வரலாற்றில் புதிய அத்தியாயம் ஆரம்பித்து இருப்பதாகவும் இது நம்பிக்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வெற்றி என்றும் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாவது சுற்றுத் தேர்தலுக்குப் பிறகு முடிவுகள் வெளிவர ஆரம்பித்த நிலையில் மேக்ரனின் ஆதரவாளர்கள் வெற்றியைக் கொண்டாட மத்திய பாரிஸ் நகரில் கூடியுள்ளனர்.

வெற்றி உறுதியானதும் தனது எதிர் வேட்பாளர் லெ பென்னைத் தொடர்பு கொண்டு மரியாதை நிமித்தமாக மேக்ரன் பேசியதாக அவரது பிரசார குழுவினர் தெரிவித்தனர். தேர்தல் முடிவு குறித்து பேசிய லெ பென் தனக்கு வாக்களித்த 11 மில்லியன் மக்களுக்கும் நன்றி தெரிவித்தார். இந்த முடிவுகள் தேசப்பற்றாளர்களுக்கும்இ உலகமயமாக்கலுக்கு ஆதரவானவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிளவை வெளிப்படுத்துவதாகவும் புதிய அரசியல் சக்தி உருவாக வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

மேக்ரனின் வெற்றி பிரான்ஸ் மக்கள் ஒருமைப்பாட்டை விரும்புவதை வெளிப்படுத்துவதாக தற்போதைய அதிபர் பிரான்சிஸ் ஒல்லாந்த் தெரிவித்தார். இம்மானுவல் மேக்ரனுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரிட்டன் பிரதமர் தெரீசா மே உள்பட பல்வேறு உலகத் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

Related posts: