பாரதிய ஜனதா கட்சி குஜராத்தில் ஆறாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது!

Tuesday, December 19th, 2017

குஜராத் மாநில சட்டசபைக்கு கடந்த 9 மற்றும் 14 ஆம் திகதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடந்தது. இரண்டு கட்ட தேர்தலையும் சேர்த்து சராசரியாக 68.41 சதவீத வாக்குகள் பதிவானது.

நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. குஜராத்தின் 33 மாவட்டங்களில் 37 இடங்களில் மையங்கள் உருவாக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடந்தது.

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்தும் குஜராத்தில் பா.ஜ.க. அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறி இருந்தன. ஆனால் அந்த கருத்துக் கணிப்புகள் அனைத்தும் அப்படியே நிஜமாகவில்லை.

முதலில் பா.ஜ.க. முன்னிலை பெற்றது. 9 மணிக்கு முன்னிலையில் மாற்றம் ஏற்பட்டது. பின் தங்கி இருந்த காங்கிரஸ் கட்சி மளமளவென அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டிருந்த காங்கிரசாருக்கு அது இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

அதே சமயத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ச்சியில் விக்கித்துப் போனார்கள். ஒருகட்டத்தில் பா.ஜ.க.வை விட 10 இடங்கள் கூடுதலாக காங்கிரஸ் முன்னிலைக்கு வந்தது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் புத்துணர்ச்சியும் உற்சாகமும் அடைந்தனர். பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கினார்கள்.

குஜராத்தை கடந்த சில ஆண்டுகளாக ஆண்ட பா.ஜ.க. முதல்-மந்திரி விஜய் ரூபானி கூட தோல்வி முகத்தில் இருப்பதாக தகவல் வெளியானது.

ஆனால், 9.30 மணிக்கு பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. பா.ஜ.க. முன்னிலை பெறத் தொடங்கியது. மாலையில் ஆட்சியமைக்க தேவையான 92 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பா.ஜனதா கட்சி குஜராத்தில் ஆறாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது.

மேற்கு ராஜ்கோட் தொகுதியில் போட்டியிட்ட முதல் மந்திரி விஜய் ருபானி 99,165 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் இந்திரானில் ராஜகுரு 59,635 வாக்குகளும் பெற்றனர். விஜய் ருபானி 39,980 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதேபோல், மெஹ்சானா தொகுதியில் போட்டியிட்ட துணை முதல் மந்திரி நிதின் பட்டேல் 68,785 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜிவாபாய் பட்டேல் 56,311 வாக்குகளும் பெற்றனர். 12,474 வாக்குகள் வித்தியாசத்தில் நிதின் பட்டேல் வெற்றி பெற்றுள்ளார்.

இரவு 9 மணியளவில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து அனைத்து தொகுதிகளுக்கும் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் பா.ஜ.க. 99 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 77 தொகுதிகளைப் பிடித்து வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியிலும், பாரதிய பழங்குடியினர் கட்சி 2 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.

குஜராத் மாநிலத்தில் கடந்த 22 ஆண்டுகளாக பா.ஜனதா கட்சி ஆட்சியில் உள்ளது. 1990-ம் ஆண்டு ஜனதாதளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்ததையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் குஜராத்தில் பா.ஜனதா கட்சி 27 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது

Related posts: