பாபர் மசூதி விவகாரம்: அத்வானி உள்ளிட்டோருக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு

Friday, June 9th, 2017

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பாபர் மசூதி இடிப்பு வழக்கில், பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட 3 பேருக்கும் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அத்வானி உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்த மனு இன்று (புதன்கிழமை) குற்றப்புலனாய்வு சிறப்பு (சி.பி.ஐ) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அத்தோடு எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமாபாரதி ஆகிய மூவரும் தலா ரூ.20 ஆயிரம் செலுத்தி விலக்கு பெற்று கொள்ளலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் திகதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட 13 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், இக்குற்றச்சாட்டிலிருந்து 13 பேரையும் விடுவித்ததை தொடர்ந்து மத்திய புலனாய்வு துறையினர் உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளது.

அதன்படி அத்வானி உள்ளிட்டோர் மீதான வழக்கு விசாரணை லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் நாள்தோறும் நடைபெற்று வந்ததோடு, அவர்களை நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

Related posts: