பாகிஸ்தான் பிரதமராக இம்ரானுக்கு வாய்ப்பு!

Friday, July 27th, 2018

பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான கட்சி தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளதையடுத்து, அவர் அந்த நாட்டின் அடுத்த பிரதமராவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

மொத்தமுள்ள 272 தொகுதிகளில் அவரது தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி (பிடிஐ) 98 இடங்களில் வெற்றியும், 20 இடங்களில் முன்னிலையும் பெற்றுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி (பிஎம்எல்-என்) 49 இடங்களில் வெற்றி பெற்று, 14 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பிலாவல் புட்டோவின் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) 23 இடங்களில் வெற்றியும், 20 இடங்களில் முன்னிலையும் பெற்றுள்ளது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 342 இடங்களில் 272 இடங்களுக்கு மட்டுமே பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. எஞ்சிய 60 இடங்கள் பெண்களுக்காகவும், 10 இடங்கள் சிறுபான்மை மதத்தினருக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

எனவே, 172 இடங்களைக் கைப்பற்றும் கட்சியே ஆட்சியமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தச் சூழலில், அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளதால் இந்தத் தேர்தலில் தாம் வெற்றியடைந்துள்ளதாக இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

முறைகேடு குற்றச்சாட்டு: இதற்கிடையே, பிஎம்எல்-என், பிபிபி ஆகியவை உள்பட பல்வேறு முக்கிய கட்சிகளும் இந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதமரும், பிஎம்எல்-என் கட்சித் தலைவருமான ஷாபாஸ் ஷெரீஃப், இந்தத் தேர்தல் முடிவுகளை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார்.

பிபிபி கட்சித் தலைவர் பிலாவல் புட்டோவும், தேர்தல் முடிந்து 24 மணி நேரத்துக்குப் பிறகும் தேர்தல் ஆணையத்தால் தெளிவான முடிவுகளை வெளியிட முடியவில்லை. அதற்கான காரணத்தையும் அவர்களால் விளக்க முடியவில்லை’ என்று சாடினார்.

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமான ஹஃபீஸ் சயீதின் மில்லி முஸ்லிம்’ கட்சி அங்கம் வகிக்கும் முத்தாஹிடா மஜ்லிஸ்-ஏ-அமல் கூட்டணி, அவாமி தேசியக் கட்சி, பாக்-சர்ஜமீன் கட்சி, தெஹ்ரீக்-இ-லப்பைக் போன்ற கட்சிகளும், வாக்கு எண்ணிக்கையின்போது தங்களது பிரதிநிதிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக குற்றம் சாட்டின.

மேலும், தேர்தல் முடிவுகளை உரிய முறையில் சட்டப்பூர்வமான ஆவணங்களில் அதிகாரிகள் வெளியிடவில்லை எனவும் அவை புகார் தெரிவித்தன.

கட்சிகளிடையே பேச்சுவார்த்தை: இந்தச் சூழலில், தேர்தல் முறைகேடுகள் குறித்து விவாதிப்பதற்காகவும், முடிவுகள் தொடர்பான பொதுக் கொள்கையை வரையறுப்பதற்காகவும் இம்ரானின் பிடிஐ அல்லாத மற்ற கட்சிகளின் கூட்டத்தை நடத்தி பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்தார்.

சட்டப் பேரவைத் தேர்தல்கள்: நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைந்து, பஞ்சாப், சிந்து, பலூசிஸ்தான், கைபர்-பக்துன்கவா ஆகிய 4 மாகாண சட்டப் பேரவைகளுக்கும் புதன்கிழமை தேர்தல் நடைபெற்றது.

இந்த மாகாணங்களில் மொத்தமுள்ள 577 தொகுகளில் 8,396 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

பஞ்சாப் மாகாண பேரவைத் தேர்தலில் பிஎம்எல்-என் கட்சி 123 இடங்களிலும், அதற்கு அடுத்தபடியாக பிடிஐ கட்சி 122 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

சிந்து மாகாண சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில், அந்த மாகாணத்தில் மிகுந்த செல்வாக்கு பெற்றுள்ள பிபிபி கட்சி மூன்றில் இரண்டு இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

கைபர்-பக்துன்கவா மாகாணத்தில் பிடிஐ மூன்றில் இரண்டு பங்கு இடங்களைப் பெறும் நிலையில் உள்ளது.

பலூசிஸ்தான் மாகாணத்தைப் பொருத்தவரை, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அங்கு தொங்கு சட்டப் பேரவை அமைவதற்கான வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவுடன் நல்லுறவை விரும்புகிறேன்’

இந்திய ஊடகங்களில் சித்திரிக்கப்பட்டதற்கு மாறாக, தாம் இந்தியாவுடன் நல்லுறவையே விரும்புவதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தனிப் பெரும் கட்சியாக இம்ரானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி உருவெடுத்ததைத் தொடர்ந்து, அவர் ஆற்றிய வெற்றியுரையில் கூறியதாவது:

அண்மைக் காலமாக இந்திய ஊடகங்கள் என்னை பாலிவுட் திரைப்பட வில்லனாக சித்திரித்து வருகின்றன. ஆனால், உண்மையில் நான் இந்தியாவுடன் நல்லுறவை விரும்பும் பாகிஸ்தானியர்களில் ஒருவன்.

இந்திய தீபகற்பம் வளமான பிரதேசமாக மாற வேண்டுமென்றால், இந்தியாவும், பாகிஸ்தானும் நல்லுறவைப் பேண வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.

இரு நாடுகளுக்கும் இடையே உள்ள அடிப்படை பிரச்னை காஷ்மீர் பிரச்னையே ஆகும். அதனையும் நாம் பேசித் தீர்க்க வேண்டும். ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதைக் கைவிட வேண்டும் என்றார் அவர்.

1992-ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் உலகக் கோப்பையை பெற்றுத் தந்த கேப்டனான இம்ரான் கான், தாராள சிந்தனை கொண்டவராக அறியப்பட்டவர். எனினும், அரசியலுக்கு வந்த பிறகு, ராணுவத்துக்கும், மதவாத அரசியலுக்கும் ஆதரவாக அவர் பேசி வந்தது மிதவாதிகளிடையே அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

Related posts: