பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அதிரடி : தடுமாற்றத்தில் முஷாரப்!

Friday, June 8th, 2018

பர்வேஷ் முஷாரப் பாகிஸ்தான் அதிபராக இருந்த காலத்தில் இயற்றிய சட்டத்தால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை வசூல் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் உச்ச நீதிமன்றம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 2007-ஆம் ஆண்டு, தேசிய மறுசீரமைப்பு அவசர (NRO) சட்டத்தை முஷாரஃப் அமுல்படுத்தினார். முன்னாள் பிரதமர் பேனசிர் பூட்டோ உள்ளிட்ட தலைவர்களுக்கு மன்னிப்பு வழங்கி, அவர்களுக்கு எதிரான வழக்கில் இருந்து விடுதலை செய்வதற்கு இந்தச் சட்டம் வகை செய்தது.
பேனசிர் பூட்டோவுடன் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்காகவே, அவரை விடுதலை செய்ய வழி கோலும் NRO சட்டத்தை முஷாரஃப் அமுல்படுத்தினார்.
இதையடுத்து, பேனசிர் பூட்டோ, முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, முன்னாள் அட்டர்னி ஜெனரெல் மாலிக் அப்துல் கயூம் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்குகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்தச் சட்டத்தை பாகிஸ்தான் நீதிமன்றம் பின்னாளில் சட்டவிரோதம் என அறிவித்தது. இந்நிலையில், NRO சட்டத்தின் மூலம் அரசியல் தலைவர்கள் விடுவிக்கப்பட்டதால், அவர்களுக்கு எதிரான ஊழல் மற்றும் நிதி முறைகேடு வழக்குகளில் தீர்ப்பு வழங்க முடியாமல் போனதாகவும், இதன் காரணமாக அரசுக் கருவூலத்துக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய பணம் இழக்கப்பட்டுள்ளதாகவும் பெரோஸ் ஷா கிலானி என்பவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ள கிலானி, முஷாரஃபிடம் இருந்து இழப்பீடு வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதையடுத்து, முஷாரஃப், ஆஸிப் அலி சர்தாரி, மாலிக் அப்துல் கயூம் உள்ளிட்டோருக்கு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக முஷாரஃப், அரபு நாடுகளில் வசித்து வரும் நிலையில், அங்கு வெளிவரும் இரண்டு செய்தித்தாள்களில் இந்த நோட்டீஸ் வெளியிடப்படும் என்று தி எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன் பத்திரிகை தெரிவிக்கிறது.

Related posts: