பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 128 ஆக உயர்வு!

Sunday, July 15th, 2018

பாகிஸ்தானில் தேர்தல் பிரசாரத்தின் போது வெடிகுண்டு வெடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டின் பாராளுமன்றம் மற்றும் சில மாகாண சட்டசபைகளுக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே, மஸ்தாங் மாவட்டத்தில் பலுசிஸ்தான் அவாமி கட்சியின் பேரணியை குறிவைத்து நேற்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.

பலுசிஸ்தான் மாகாணம் மஸ்தாங்கில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் அவாமி கட்சியின் வேட்பாளர் மிர் சிராஜ் ராய்சானி உள்பட 33 பேர் உயிரிழந்தனர் என முதல் கட்டமாக தகவல்கள் வெளியானது.

இந்த தாக்குதலில் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், அவர்களில் 15 பேர் வரையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தாலிபான் பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.

இந்நிலையில், மஸ்தாங் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 200க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts: