பங்களாதேஸ் முன்னாள் அரசியல் தலைவருக்கு மரணதண்டனை உறுதியானது!

Wednesday, August 31st, 2016

பங்களாதேஷின் ஜமாட்-ஈ-இஸ்லாமி கட்சியின் நிதிப் பிரதானியாக முன்னர் செயற்பட்ட கோடீஸ்வரரான மிர் குவாசீம் அலி என்பவருக்கு, மரண தண்டனை நிறைவேற்றப்படுவது ஓரளவு உறுதியாகியுள்ளது. அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கெதிராக, அவர் தாக்கல் செய்த மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே இந்நிலை ஏற்பட்டுள்ளது.

பங்களாதேஷின் சுதந்திரப் போராட்டம், 1971ஆம் ஆண்டு இடம்பெற்ற போது, அங்கு இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளின்போது, குற்றவாளியாக இவர் இனங்காணப்பட்டு, அவ்விசாரணைகளை மேற்கொண்ட சர்ச்சைக்குரிய தீர்ப்பாயத்தால், மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் விதிக்கப்பட்ட இந்தத் தண்டனை, விரைவில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதை மாற்றும் நோக்கில், பங்களாதேஷ் உச்சநீதிமன்றத்தில் அவர் மேன்முறையீடு செய்திருந்தார். எனினும், அந்த மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டதால், இன்னும் சில நாட்களில், அவருக்கான மரணதண்டனை நிறைவேற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த பங்களாதேஷின் சட்டமா அதிபர் மஹ்புபே அலாம், ஜனாதிபதியின் பொதுமன்னிப்புக்கான கோரிக்கையை அவர் முன்வைக்க முடியுமெனவும், அவ்வாறில்லாத பட்சத்தில், அரசு விரும்பும் எந்த நேரத்திலும், அவருக்கான தண்டனை நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார்.

குவாசீம் அலியின் சட்டப் பிரிவில் இடம்பெற்றிருந்த அவரது மகனான அஹ்மெட் பின் குவாசிம், இம்மாத ஆரம்பத்தில் கடத்தப்பட்டிருந்தார். குவாசீம் அலியின் மரணதண்டனை நிறைவேற்றப்படும் போது ஏற்படும் எதிர்ப்புகளை அடக்கி ஒடுக்குவதற்காகவே, அவரது மகன், இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

போர்க்குற்றச்சாட்டுகள் காரணமாக, 2013ஆம் ஆண்டிலிருந்து இதுவரை, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 5 பேர், இதுவரை மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

சுதந்திரப் போர் வெடித்த போது, அந்தக் கோரிக்கைக்கு எதிராக ஜமாட் கட்சி செயற்பட்டதோடு, பாகிஸ்தானின் இராணுவத்தோடு இணைந்து செயற்பட்டிருந்தது. இந்தப் போரில், 300,000 தொடக்கம் 500,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: