நோபல் பரிசு பெற்றவர் மனைவியை விடுவித்தது சீனா!

Friday, July 13th, 2018

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சீன மனித உரிமை ஆர்வலரின் மனைவி, வீட்டுச்சிறையில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டார்.சீனாவில், மனித உரிமைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர், லியூ சியாபோ.

அரசியல் விமர்சகர், எழுத்தாளர். ஆனால், நாட்டின் இறையான்மைக்கு எதிராக செயல்பட்டதாக கூறி இவரை சீன அரசு 2009ல் சிறையில் அடைத்தது. 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சியாபோவின் மனித உரிமைகளுக்கு ஆதரவான செயல்பாடு மற்றும் பிரசாரத்தை பாராட்டி, 2010 அக்., 8ல், அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. சிறையில் இருந்தவாறு நோபல் பரிசுக்கு தேர்வான உலகின் மூன்றாவது நபர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

இம்மகிழ்ச்சியை சிறைக்கு சென்று கணவருடன் பகிர்ந்து கொண்டார் அவரது மனைவி லியூ ஷியா.மீண்டும் வீட்டுக்கு வந்த அவர் அன்று முதல் வீட்டு சிறையில் வைக்கப்பட்டார். சிறையில் இருந்த சியாபோ, கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 2017 ஜூலை 13ல் மரணமடைந்தார்.இதற்குப்பின்னரும், அவரது மனைவி லியு ஷியா, தொடர்ந்து வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார்.

இவருக்கும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இவரை, விடுதலை செய்ய ஐ.நா., சீன அரசை வற்புறுத்தியது.இந்நிலையில் எட்டு ஆண்டுகளுக்குப்பின், அவர் சீனாவை விட்டு வெளியேற நேற்று சீன அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து லியூ ஷியா, ஜெர்மனிக்கு புறப்பட்டு சென்றார்.

Related posts: