நிதிஷ்குமார் மீண்டும் முதல்வரானார்!

Friday, July 28th, 2017

பீகாரில் ஆளும் மெகா கூட்டணியில் ஏற்பட்ட விரிசல் காரணமாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார், பா.ஜ.க. ஆதரவுடன் மீண்டும் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுள்ளார்.

பீகாரில் ஆட்சி அமைத்திருந்த மெகா கூட்டணியில் பூசல் வசூலித்ததை அடுத்து, முதல்வர் நிதிஷ்குமார் நேற்று அதிரடியாக தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தையும் உடனடியாக கொடுத்தார். ஆளுநரும் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டார்.

பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமாருக்கு மோடி தனது டுவிட்டரில் வரவேற்பு தெரிவித்தார். பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் நிதிஷ்குமாரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
பாட்னா நகரில் நடைபெற்ற பா.ஜ.க. ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் நிதிஷ்குமாருக்கு ஆதரவாக பா.ஜ.க. சார்பில் ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்து ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் நிதிஷ் குமார். ஆட்சியமைக்க போதுமான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தையும் அவர் அளித்தார்.

அதன்படி பா.ஜ.க. ஆதரவுடன் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க நிதிஷ்குமாருக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்வராக நிதிஷ் குமாரும், துணை முதல்வராக சுஷில் மோடியும் பதவியேற்றனர்.

Related posts: