நடிகர் சங்கப் போராட்டத்தைத் தவிர்த்த தமிழ்த் தொலைக்காட்சிகள்!

Friday, January 20th, 2017

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, தென்னிந்திய நடிகர் சங்கம் இன்று உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகிறது. மாணவர்களின் போராட்டமே முக்கியம். நடிகர் சங்கம் நடத்தும் போராட்டத்துக்கு ஊடக வெளிச்சம் வேண்டாம் என்று நடிகர் சங்கத் தலைவர் நாசர் வேண்டுகோள் விடுத்தார்.

இது குறித்து சங்கத்தின் சார்பில் தலைவர் நாசர் உள்ளிட்ட நிர்வாகிகள் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: இன்று தமிழக எல்லைக்குள் மட்டுமல்ல. உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் மக்கள், உணர்ச்சிக் கொந்தளிப்பில் மூழ்கி இருக்கின்றனர். முதுபெரும் தமிழ்க்குடியின் ஒரு கலாசார சின்னம் முடக்கப்பட்டுக் கிடக்கிறது. அதை மீட்டு கொண்டுவர தன்னிச்சையாய் தன்னார்வத்தோடு அலைகடலென மாணவர் சமுதாயமும் இளைஞர்களும் ஒன்று சேர்ந்து போராடுகின்றனர். அந்த எழுச்சியினால் ஈர்க்கப்பட்டு பெண்களும், குழந்தைகளுமாய் வீதி இறங்கி பங்கு பெறுகின்றனர்

இந்த மாபெரும் போராட்டத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் முழுமையான ஆதரவைத் தருகிறது. வெறும் பேச்சுக்களால் அல்லாமல் மெளனத்தை மொழியாய் கொண்டு மெளன அறவழி அமர்வை நடத்துகிறது. நடிகர் சமூகம் மட்டுமின்றி பல்வேறு துறை சார்ந்தோரும் கலந்து கொண்டு ஆதரவை வெளிபடுத்த போகின்றனர். யாரும் கருத்துகளை, ஆலோசனைகளை வெளிபடுத்த போவதில்லை. எனவே எங்களது இந்த நிகழ்வை டி.வி மற்றும் இணையதள நண்பர்கள் “விடியோ கவரேஜ்’ செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

அதற்குப் பதிலாக, உண்மையில் இந்தப் போராட்டத்தின் காரணகர்த்தாக்கள் வெட்டவெயிலிலும் பனியிலும், பசியிலும் சிதறாமல் கூடியிருக்கும் அம்மாணவர்கள், பல்துறை சார்ந்த இளைஞர்கள் அவர்கள்தான் மக்களால் அறியப்பட வேண்டியவர்கள், அவர்கள் கருத்துகள்தான் கேட்கப்பட வேண்டியவை. இன்றைய சூழலில் யாரை முன்னிறுத்த வேண்டுமோ நாம் இருவரும் சேர்ந்து அவர்களை முன்னிறுத்துவோம். இது நம் கடமை என்ற வேண்டுகோளை உங்கள் முன் வைக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையிலும் மாணவர்களின் போராட்டத்துக்கு மதிப்பளித்தும் தமிழ்ச் செய்தித் தொலைக்காட்சிகளில் நடிகர் சங்கத்தின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. தமிழகம் முழுக்க உணர்வுபூர்வமான நடைபெற்றுவரும் மக்களின் போராட்டங்களையே தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறார்கள். தொலைக்காட்சிகளின் இந்த நடவடிக்கை மக்களிடம் பலத்த ஆதரவைப் பெற்றுள்ளது.

na3

Related posts: