ஆப்கானிஸ்தானில் தொடர் குண்டுவெடிப்பு – 9 பேர் உடல் சிதறிப் பலி!

Saturday, May 15th, 2021

ஆப்கானிஸ்தானில் யுத்த நிறுத்தத்தை மீறி இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பில் சிக்கி 9 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த செய்திக் குறிப்பில், 2018ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ரம்ழான் பண்டிகையையொட்டி தலிபான் பயங்கரவாத அமைப்பும் ஆப்கானிஸ்தான் அரசும் பரஸ்பர ஒப்புதலின் பேரில் 3 நாட்களுக்கு யுத்த நிறுத்தத்தை கடைப்பிடித்து வருகின்றன.

அதன்படி இந்த ஆண்டுக்கான 3 நாள் யுத்த நிறுத்தம் நேற்று முன்தினம் காலை அங்கு அமுலுக்கு வந்தது.

யுத்த நிறுத்தம் அமுலுக்கு வந்த சில மணி நேரத்தில் ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள காந்தஹார் மற்றும் குண்டுஸ் மாகாணங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களில் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டதால் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காந்தஹார் மாகாணத்தின் பஞ்ச்வாய் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சாலைக்கு அடியில் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டில் கார் ஒன்று சிக்கி வெடித்துச் சிதறியது.

இதில், பெண்கள் சிறுவர்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். அதேபோல் குண்டூஸ் மாகாணத்தின் சர்தாவ்ரா மாவட்டத்தில் நடந்த மற்றொரு குண்டு வெடிப்பில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இத்தாக்குதல்களுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

எனினும் தலிபான் பயங்கரவாதிகளே யுத்த நிறுத்தத்தை மீறி இந்த தாக்குதல்களை நடத்தி இருப்பார்கள் என ஆப்கானிஸ்தான் இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. எனினும் இதுகுறித்து தலிபான்கள் தரப்பில் உடனடியாக எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என்றுள்ளது.

000

Related posts: