தீ விபத்து: பிரான்ஸில் உடல் கருகி மூவர் பலி!

Monday, June 24th, 2019

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் திடீரென அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் உடல்கருகிப் பலியாகியுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாரிசின் மத்திய பகுதியில் 6 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று காலை திடீரென தீப்பிடித்துள்ளது. கொழுந்துவிட்டு எரிந்த தீ, கட்டடத்தின் அடுத்தடுத்த தளங்களுக்கும் வேகமாக பரவியது.

இதேவேளை, அடுக்குமாடி குடியிருப்பின் அருகில் உள்ள இரண்டு கட்டிடங்களிலும் தீ பரவியுள்ளது. இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் உடனடியாக பொலிஸாருக்கும் தீயணைப்பு பிரிவுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

விரைந்து செயற்பட்ட தீயணைப்பு பிரிவினர், 51 தீயணைப்பு வாகனங்களில் 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடுமையாக பரவிய தீயிணை சுமார் 4 மணி நேரம் போராடியே தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத் தீவிபத்தில் 3 பேர் உடல் கருகி பலியாகியுள்ளதுடன் இருபதிற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் எவ்விதமான தகவல்களும் வெளியாகவில்லை. எனினும் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts: