தீவிரவாத அச்சுறுத்தல் எதிரொலி: 58 வெளிநாட்டினரை வெளியேற்றிய ஐரோப்பிய நாடு

Thursday, March 31st, 2016

அண்மைக்காலங்களில் தொடரும் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக 58 வெளிநாட்டினரை ஐரோப்பிய நாடான மொண்டெனேகுரோ அதிரடியாக வெளியேற்றியுள்ளது.

ஐரோப்பிய கண்டத்தில் அமைந்துள்ள குட்டி நாடான மொண்டெனேகுரோ ஜப்பானிய தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 58 வெளிநாட்டவர்களை அந்த நாட்டை விட்டே வெளியேற்றியுள்ளது. கடந்த 1995 ஆம் ஆண்டு டோக்கியோ நகரில் அமைந்துள்ள சுரங்க பாதையில் Aum Shrinrikyo எனும் தீவிரவாத அமைப்பு நச்சு வாயுவை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது.

இதில் சம்பவயிடத்திலேயே சுருண்டு விழுந்து 12 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் ஆயிரக்கணக்கானோர் கடுமையாக பாதிப்புக்குள்ளானார்கள். இச்சம்பவத்தை அடுத்து ஜப்பான் அரசின் தொடர் நடவடிக்கையால் இந்த அமைப்பில் தொடர்புடைவர்கள் பல நாடுகளுக்கு தலைமறைவானார்கள்.

தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் தொடர்ந்து தீவிரவாத அச்சுறுத்தல் இருந்து வருவதால் மொண்டெனேகுரோ நாடும் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சம்பந்தப்பட்ட அமைப்பினை சேர்ந்தவர்கள் மொண்டெ னேகுரோவில் பதுங்கியிருப்பதாக அங்குள்ள பொலிசாருக்கு தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என கூறப்படுகிறது.

இருப்பினும் உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளின் எச்சரிக்கையை அடுத்து இந்த வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 58 வெளிநாட்டவர்களில் 43 பேர் ரஷ்யர்கள் எனவும், ஜப்பானியர்கள் 4 பேர் எனவும் பெலாருஸ் நாட்டவர் 7 பேர் எனவும் தெரிய வந்துள்ளது.

1995-ல் டோக்கியோ தாக்குதலுக்கு பின்னர் Aum Shrinrikyo அமைப்பு இதுவரை எவ்வித தீவிரவாத தாக்குதலையும் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: