திருமண விருந்தினரை சுட்ட பெண் சாமியார் !

Saturday, November 19th, 2016
திருமண கொண்டாட்டத்தின்போது துப்பாக்கி வேட்டுக்களை வானோக்கி சுட்ட பின்னர் மூன்று நாட்கள் தலைமறைவாக இருந்த பெண் சாமியார், சாத்வி தேவா தாக்கூர், நீதிமன்றம் ஒன்றில் சரணடைந்தார்.
இந்தியாவின் வடக்கேயுள்ள ஹரியானா மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த சம்பவம் பற்றி வெளியான காணொளியில், சாத்வி தேவ தாக்கூர் முதலில் ரிவால்வராலும், பின்னர் இரட்டைக் குழல் துப்பாக்கியாலும் சுடுவது தெரிகிறது. அவரோடு சேர்ந்து அவருடைய சில பாதுகாப்பு பணியாளர்களும் சுடுகின்றனர்.
“புனிதப் பெண்” அல்லது “பெண் கடவுள்” என்று பொருள்படும் சாத்வி என்ற இந்தி மொழி சொல்லை தனது பெயரோடு இணைத்திருக்கும் சாத்வி தேவ தாக்கூர், நடன மேடைக்கு சென்று, அவர் விரும்புகிற ஒரு பாடலை ஒலிக்கவிட கேட்டு நடனமாடி, திருமணத்தில் கலந்து கொண்ட விருந்தினரை பிரமிக்க வைத்ததாக இந்திய ஊடகங்கள் கூறின .
எல்லோரும் சூழ்ந்திருக்கும் வேளையில் துப்பாக்கிச்சூடு நடத்த தொடங்கி அனைவரையும் அவர் பீதி அடைய செய்திருக்கிறார். மணமகன் மற்றும் மணமகளின் தரப்பினர் அவரை நிறுத்துவதற்கு கேட்டுகொண்டது செவிடன் காதில் ஒலித்த சங்காகிப் போனது.
தவறுதலாக சுடப்பட்ட துப்பாக்கி குண்டு மணமகளின் 50 வயது அத்தை ஒருவரை தாக்கி அவர் கீழே சரிந்தவுடனும், மூன்று உறவினர் படுகாயமுற்ற பின்னரும்தான் இந்த துப்பாக்கிக்சூடு நின்றது.
அப்போது உருவான குழப்பத்தில் சாத்வியும், அவருடைய ஆறு பாதுகாப்பு பணியாளர்களும் தப்பிவிட்டனர்.
அவர்கள் ஏழு பேர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் அவர்களை பிடிக்க தேடி வந்தனர்.வெள்ளிக்கிழமை இந்த சாமியார் மேஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை நீதிமன்றம் 5 நாட்கள் போலிஸ் காவலில் வைக்க உத்தரவிட்டது. அவரது மெய்க்காப்பாளர்கள் இன்னும் பிடிபடவில்லை.
“நான் நிரபராதி, நான் எந்தத் தவறையும் செய்யவில்லை. இது எனக்கெதிராக போடப்பட்ட சதி”, என்று சரணடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் சாத்வி கூறினார். “இந்த நிகழ்வில் ஒருவர் இறந்துவிட்டார் என்பது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன்”, என்றார் சாத்வி.
அனைத்திந்திய இந்து மகாசபை என்ற சிறியதொரு இந்து மத நிறுவனத்திற்கு துணை தலைவராக இருக்கும் சாத்வி தாக்குர், இவ்வாறு சர்ச்சைக்குரிய வகையில் செய்திகளில் அடிபடுவது இது முதல்முறையல்ல.
முஸ்லிம் மற்றும் கிறித்தவ மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கு, அவர்களை மலடாக்க வேண்டும் என்று கூறியது தொடர்பாக கடந்த ஆண்டு காவல்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது.
“முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் அதிக குழந்தைகளை பெற்றெடுப்பதை தடுக்கும் வகையில் அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருப்பதற்கு அவர்களை மலடாக்குவது கட்டாயப்படுத்தப்பட வேண்டும்” என்று அவர் ஒரு கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
தங்களுடைய நாட்டில் சிறுபான்மையினரின் மதமாக மாறுகின்ற அச்சுறுத்தலை தடுக்கும் வகையில், இந்து மத பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றுகொள்ள வேண்டும் என்கிற இந்து மத தேசியவாத தலைவர்களின் பரிந்துரைகளை ஏற்றுகொள்வதாக சாத்வி தெரிவித்திருக்கிறார்.
“நீளமாக சென்று கொண்டிருக்கும் ஒரு கோட்டோடு நீங்கள் எவ்வாறு போட்டியிட முடியும்? அதற்கு பக்கத்தில் அதனைவிட நீள கோடு ஒன்றை வரைவதன் மூலம் தான்” என்று அவர் கூறியிருக்கிறார்.இன்னொரு சர்ச்சைக்குரிய கருத்தாக, மசூதிகளிலும், தேவாலயங்களிலும், இந்து மத ஆண் மற்றும் பெண் கடவுள்களின் சிலைகள் வைக்கப்பட வேண்டும் என்றும், மகாத்மா காந்தியை சுட்டு கொன்ற நாதுராம் கோட்ஸேவின் சிலை ஒன்று ஹரியானாவில் நிறுவப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளதாக டிஎன்எ செய்தித்தாள் சாத்வியை மேற்கோள் காட்டியுள்ளது.
கர்னால் மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய கிராமமான பிராஸில், சாத்வி பிறந்து வளர்ந்தார்.சில ஆண்டுகளுக்கு முன்னால், அந்த கிராமத்தில் ஆசிரமம் ஒன்றை நிறுவியிருக்கிறார். அவரை பின்பற்றும் சிலரில் பெரும்பாலோர் உள்ளூர் கிராமவாசிகளாவர்.
நவீன வாழ்க்கைப்பாணியால் பிரபலத்தை தேடுபவராக சாத்வி அறியபடுகிறார் என்று உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.
தலை முதல் கால் வரை எப்போதும் காவி ஆடை அணிந்திருக்கும் 27 வயதான சாத்வி, பொன் ஆபரணங்கள் மற்றும் துப்பாக்கி விரும்பியாக தோன்றுகிறார். சகோதரர் ராஜீவ் தாக்குரால் நடத்தப்படும் அவருடைய முகநூல் பக்கம், சாத்வியை தேவா இந்திய பவுண்டேஷனின் இயக்குநர் என்றும், ஒரு தேசியவாதி என்றும் விவரிக்கிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இந்து மகாசபையில் இணைந்தார். சாத்வியோடு அவர்களது கட்சியின் டெல்லியிலுள்ள தலைமையகத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் பயணம் மேற்கொண்டதாக ஹரியானாவிலுள்ள இந்து மாகா சபை மூத்த உறுப்பினர் தராம்பால் தெரிவித்திருக்கிறார்.
“நான் அவருக்கு சார்பாக பேசிய பின்னர் கட்சியின் தேசிய துணை தலைவராக சாத்வி நியமிக்கப்பட்டார்” என்று அவர் கூறியிருக்கிறார்.”அவர் துப்பாக்கிகளோடு புகைப்படங்களை எடுத்துகொள்வது எங்களுக்கு மிகவும் அசௌகரியம் அளித்தது. அதனால், எங்களுடைய கொண்டாட்டங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் சாத்வியை அழைப்பதை விரைவில் நிறுத்திவிட்டோம்”.
சாத்வி ஓர் ஆயுத விரும்பி என்பதற்கு செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சோக சம்பவத்தின் காணொளி ஒரு சான்றாகும்.இப்போது, சாத்வி தன்னை தானே சிக்கலுக்குட்படுத்திக்கொண்டதாகவே தோன்றுகிறது.

_92500503_ead51a0c-17e6-4945-9919-8e851fed25ac

Related posts: