தினகரனை கைது செய்ய வருகிறது டெல்லி போலீஸ்!

Monday, April 17th, 2017

அ.தி.மு.க வின் இரட்டை இலை சின்னத்தைப் பெறவும் சசிகலா அதிமுக பொதுச்செயலரானது செல்லும் என்ற தீர்ப்பை பெறவும் தேர்தல் ஆணையத்துக்கு நெருக்கமான தொழிலதிபர் சுகேஷ் சந்திராவுக்கு இலஞ்சம் கொடுத்து வசமாக சிக்கியுள்ள டிடிவி தினகரனை கைது செய்ய இன்று மாலை டெல்லி போலீஸ் சென்னை வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. ஆர்கே நகர் இடைத் தேர்தலில் ஓபிஎஸ் அதிமுக தங்களுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கோரியது. இதற்கு சசிகலா அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது.

இதனால் அதிமுக கட்சி, கொடி, சின்னமான இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதனால் சசிகலா கோஷ்டி அதிமுக (அம்மா) எனவும் ஓபிஎஸ் அணி அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) எனவும் இரு கட்சிகளாகின.

இதனிடையே சசிகலா அதிமுக பொதுச்செயலராக நியமிக்கப்பட்டது செல்லுமா? இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது தொடர்பான விசாரணை டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பை பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு நெருக்கமாக சுகேஷ் சந்திரா என்ற தொழிலதிபருக்கு டிடிவி தினகரன் ரூ1.30 கோடி லஞ்சம் கொடுத்தது அம்பலமானது.

தெற்கு டெல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சுகேஷ் சந்திராவிடம் இருந்து டிடிவி தினகரன் கொடுத்த லஞ்சப் பணம் சிக்கியது. இதையடுத்து சுகேஷ் சந்திராவை கைது செய்த டெல்லி போலீசார் டிடிவி தினகரன் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் டிடிவி தினகரன் மீதும் டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் டிடிவி தினகரன் ஆஜராக டெல்லி போலீஸ் சம்மன் அனுப்புகிறது. அத்துடன் தினகரனை கைது செய்யவும் டெல்லி போலீஸ் இன்று சென்னை வர உள்ளது.

ஆர்கே நகர் இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு ரூ89 கோடி லஞ்சம் கொடுத்து ‘ஆவணங்களுடன்’ சிக்கியவர் தினகரன். ஏற்கனவே அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் பல தினகரன் மீது நிலுவையில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: