அமெரிக்கா – சவுதி இடையில் 100 பில்லியன் டொலர்கள் உடன்படிக்கை !

Monday, May 22nd, 2017

அமெரிக்காவுக்கும் சவுதி அரேபியாவுக்கம் இடையில் சுமார் 100 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த சனிக்கிழமை தனது பாரியார் மெலனியா ட்ரம்புடன் சவுதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொண்டதன் பின்னரே இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

தீவிரவாதம் மற்றும் ஈரானின் தலையீடு ஆகியவற்றை எதிர்கொள்ளும் பொருட்டே இந்த ஆயுத உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்பின் குறித்த விஜயத்தினால் அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியாவுக்கு இடையில் உள்ள உறவுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இரு நாடுகளுக்கு இடையில் காணப்பட்ட உறவுகள் தொடர்பில் கருத்து தெரிவித்த சவுதி அரசியல் ஆய்வாளர் அபூதாஸிஸ் யூசுப் (Abudaziz Yousuf), “ஈரானின் தலையீடு காரணமாக சவூதி அரேபியாவின் நடவடிக்கைகளுக்கு தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன. ஈரானுடன் அமெரிக்கா கொண்டிருந்த நெருங்கிய உறவு காரணமாகவே அமெரிக்காவுக்கு இடையிலான உறவில் சவூதி அரேபியா ஒரு இடைவெளியை பேணி வந்தது” என தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க கடந்த 13 மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா சவுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது சவூதி மன்னர் அவரை வரவேற்க விமானநிலையத்திற்கு செல்லவில்லை எனவும் அது தொடர்பான ஒளிப்படங்கள் வெளியிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ட்ரம்பின் விஜயத்தின் போது அவரை வரவேற்க சவுதி மன்னர் விமான நிலையத்திற்கு சென்றதோடு குறித்த வரவேற்பு நிகழ்வு தொடர்பான ஒளிப்படங்கள் உடனுக்குடன் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: