தாய்லாந்தில் பொதுத் தேர்தல் திகதி அறிவிப்பு!

Wednesday, December 12th, 2018

தாய்லாந்தில் 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி பொது தேர்தல் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசியல் கட்சிகள் தமது பிரசார நடவடிக்கைகளை சுதந்திரமான முறையில் மேற்கொள்ள முடியும் என தாய்லாந்தின் இராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தாய்லாந்தில் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் இருந்து வந்த நிலையில் நான்கு வருடங்களுக்கு முன்னர் இராணுவம் அரச நிர்வாகத்தை கைப்பற்றியது.

அதன் பின்னர், மீண்டும் ஜனநாயக முறையிலான அரசாங்கம் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் என தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு வந்த போதிலும், அதனை பிற்போட்டு வந்துள்ளது.

2014 ஆம் ஆண்டு பிரதமர் யின்க்லுக் ஷினவாத்ராவின் தலைமையிலான அரசாங்கம், இராணுவத்தால் வெளியேற்றப்பட்டு இராணுவம் நிர்வாகத்தை பொறுப்பேற்ற போது, நாட்டில் வன்செயல் சம்பவங்கள் பல இடம்பெற்றன. அவற்றை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு மக்கள் கருத்து கணிப்பின் ஊடாக யாப்பில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது.

புதிய யாப்பிற்கு அமைய ஜனநாயக முறைமையிலான தேர்தல் உட்பட பல்வேறு அரசியல் சீர்திருத்தங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இராணுவ ஆட்சின் போது, பொது இடங்களில் ஐந்து பேருக்கு அதிகமானவர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அத்துடன் இராணுவ ஆட்சிக்கு எதிராக செயல்பட்ட பல நூற்றுக் கணக்கானவர்கள் சிறையிலடைக்கப்பட்டு விசாரணையின் பின்னர் தண்டனை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி நடைபெறவுள்ள பொது தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts: