தமிழக முதல்வர் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் – மு.கருணாநிதி

மீனவர் பிரச்சினைக்கு தமிழக முதல்வர் தீர்வு காண வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளதாக தி ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.
இலங்கையில் எத்தகைய ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கிட்டாது எனவும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக 45 நாள் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்து தொழிலுக்கு சென்ற முதல் நாளே தமிழக மீனவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலும் மு.கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மீன்பிடி தடைக்காலத்திற்கான நிவாரணத் தொகை 2000 ரூபாவிலிருந்து 5,000 ரூபா வரை உயர்த்தப்படும் என தி.மு.க வின் தேர்தல் பிரச்சாரத்தை ஒத்தவகையில் அ.தி.மு.க வும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டதாகவும், அது எழுத்து வடிவில் மாத்திரமே காணப்படுவதாகவும் தி.மு.க தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழக மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்படும் போதெல்லாம் மத்திய அரசுக்கு ஏற்கனவே எழுதிய கடிதத்தின் நகலை மீண்டும் ஜெயலலிதா அனுப்பி வைத்து தனது கடமைகள் நிறைவு பெற்றதாக எண்ணுவதாகவும் மு.கருணாநிதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை முடிவு காணப்படாது அந்தரத்தில் தொங்கும் நிலையில் வெறுமனே கடிதங்கள் ஊடாக தீர்வு காண்பது சாத்தியமற்றது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினை தொடர்கதைதானே என தமிழக அரசு அலட்சிய போக்குடன் செயற்படுமா அல்லது இந்த பிரச்சினை தொடர்பில் இனியாவது அக்கறையுடன் செயற்படுமா எனவும் மு.கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த பிரச்சினை தொடர்பில் பிரதமரை நேரில் சந்தித்து மீனவர் வாழ்க்கையை புரட்டிப்போடும் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
Related posts:
|
|