ட்ரம்பிற்கு வெற்றி பெறுவதற்கான அனுமதி மறுக்கப்படும் – ஜூலியன் அசாஞ்ச்!
Saturday, November 5th, 2016
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக்கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பிற்கு வெற்றி பெறுவதற்கான அனுமதி மறுக்கப்படுமென விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்ச் (Julian Assange) தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். புத்திஜீவிகள் உள்ளிட்ட சர்வதேச ஆயுத நிறுவனங்கள், வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் ஊடகங்கள் ஆகியன ஹிலரி கிளிண்டன் வெற்றி பெறுவதையே விருப்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிளிண்டன் நிதியத்திற்கு நிதி அனுசரணை வழங்குகின்ற நிறுவனங்களே ஐ.எஸ் அமைப்பினருக்கு நிதி அனுசரணை வழங்குவதாகவும் ஜூலியன் அசாஞ்ச் தெரிவித்துள்ளார்.இதில் குறிப்பாக சவுதி அரேபியா மற்றும் கட்டார் ஆகிய நாடுளின் அரசாங்கங்கள் கிளிண்டன் நிதியத்திற்கு நிதி அனுசரணை வழங்குகின்ற அதேவேளை, ஐ.எஸ். அமைப்பினருக்கும் நிதி அனுசரணை வழங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹிலரி கிளிண்டன் அமெரிக்காவின் இராஜாங்க அமைச்சராக இருந்த காலப்பகுதியில் சவுதி அரேபியாவுடன் 80 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான ஆயுத கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளதாக விக்கிலீக்ஸ் நிறுவனர் தெரிவித்துள்ளார்.
மேலும், லிபியாவில் இடம்பெற்ற ஆட்சிக்கவிழ்ப்பு மற்றும் போருக்கு ஹிலரியே காரணமெனவும் அவர் கூறியுள்ளார்.இலண்டனின் ஈக்வடோர் தூதரகத்தில் நடைபெற்ற நேர்காணலில் கலந்துகொண்ட ஜூலியன் அசாஞ்ச் அங்கு 25 நிமிடங்கள் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
|
|
|


