டிரம்ப் என்ன முடிவெடுப்பார் என்று எனக்கு தெரியாது – பிரான்ஸ் அதிபர்!

Thursday, May 3rd, 2018

அணு ஆயுத திட்டங்களை நிறைவேற்றி வரும் ஈரான் நாட்டுடன், வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தை கடந்த 2015ஆம் ஆண்டு செய்துகொண்டன.

ஒபாமா, அமெரிக்காவின் அதிபராக இருந்தபோது செய்துகொண்ட இந்த ஒப்பந்தத்தில் தற்போதைய அதிபர் டிரம்புக்கு உடன்பாடு இல்லை. இந்த ஒப்பந்தமே, பைத்தியக்காரத்தனமானது என்றும், ஈரான் நாட்டுடனான அணு சக்தி ஒப்பந்தம் அமெரிக்க வரலாற்றில் மிக மோசமானது என்றும் டிரம்ப் விமர்சித்தார்.

இந்த நிலையில், ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்தவில்லை, அந்த நாடு ரகசியமாக அணு ஆயுத திட்டங்களை நிறைவேற்றி வந்து உள்ளது என்ற குற்றச்சாட்டை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ முன்வைத்து உள்ளார். மேலும் “ஈரானின் ரகசிய அணு ஆயுத திட்டங்களுக்கு என்னிடம் ஆதாரம் உள்ளது” என்று கூறினார்.

ஈரான் அணு ஆயுத திட்டங்களை ரகசியமாக தொடர்ந்து வந்து உள்ளது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ கூறி உள்ளதைத் தொடர்ந்து, ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது பற்றி 12 நாளில் முடிவு எடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கோம் டர்ன்புல்லை சந்தித்து கலந்துரையாடிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் பின் நிருபர்களிடம் பேசுகையில், ”2015-ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் குறித்து மே 12-ந் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் என்ன முடிவு எடுப்பார் என்பது பற்றி எனக்கு தெரியாது. அணு ஆயுத திட்டங்களை நிறைவேற்றும் ஈரான் நாட்டுக்கு தடை விதிக்கும் விதமாக ஒரு சிறந்த முடிவை அவர் எடுப்பார் என நம்புகிறேன். மேலும் பொருளாதார சீர்திருத்தங்களை எதிர்த்து மே தினத்தன்று பாரீசில் வன்முறை செயல்களில் ஈடுபட்ட கழகக்காரர்களை வன்மையாக கண்டிக்கிறேன்” என கூறினார்.

முன்னதாக கடந்த வாரம் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற அமெரிக்க-பிரான்ஸ் அதிபர்களுக்கிடையேயான சந்திப்பில், ஈரான் நாட்டுடனான அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் டிரம்ப் தொடர வேண்டும் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related posts: