ஜூலியன் அசாஞ்சே நாடுகடத்தும் விவகாரம்: நீதிபதி முன்னிலையில் விசாரணை!

Saturday, June 15th, 2019

விக்கிலீக்ஸ் இணை நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே நாடுகடத்தும் விவகாரம் தொடர்பான விசாரணையில், அமெரிக்க வரலாற்றில் இல்லாத அளவுக்கு ரகசிய தகவல்கள் மீது சமரசம் செய்துகொள்ளப்பட விவகாரம் இது என, அமெரிக்க அரசு சார்பில் வாதிடப்பட்டது.

அவுஸ்திரேலியாவின் ஜூலியன் அசாஞ்சேவிக்கிலீக்ஸ் விவகாரம் காரணமாக அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட உள்ளார். இதற்கான உத்தரவில் பிரித்தானிய உள்துறைச் செயலர் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, இந்த வழக்கு வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 2020யில் 5 நாட்களுக்கு நடைபெறும் என்று நீதிபதி அறிவித்தார். அப்போது ஜூலியன் அசாஞ்சே உயர் பாதுகாப்பு லண்டன் பெல்மார்ஷ் சிறையில் இருந்து வீடியோ இணைப்பு வழியாக நீதிபதியிடம் பேசினார்.

அவர் கூறுகையில், ‘என் வாழ்க்கையின் 175 ஆண்டுகள் இதில் பணயப்பொருளாக மிக நிச்சயமான அபாயத்தில் சிக்குண்டு கிடக்கின்றன. விக்கிலீக்ஸ் என்பது ஒரு வெளியீட்டு நிறுவனம் மட்டுமே’ என தெரிவித்தார்.

ஜூலியன் அசாஞ்சே சார்பாக வாதாடிய பாரிஸ்டர், ‘பலவகையான ஆழமான விவகாரங்களை என் கட்சிக்காரருக்கு எதிரான இந்த வழக்கு எழுப்புகிறது. ஜூலியன் அசாஞ்சேவின் தற்போதைய 50 வார சிறைத்தண்டனையையும் எதிர்த்து முறையிடுவார்’ என தெரிவித்தார். மேலும் அசாஞ்சே மீதான வழக்கு பத்திரிகை சுதந்திரத்தின் மீதான முழு வீச்சான தாக்கு என்று நீதிபதியிடம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க அரசு சார்பாக வாதிட்ட பாரிஸ்டன் பென் பிராண்டன் கூறுகையில், ‘அமெரிக்க வரலாற்றில் இல்லாத அளவுக்கு ரகசிய தகவல்கள் மீது சமரசம் செய்து கொள்ளப்பட்ட விவகாரம் ஆகும் இது. அமெரிக்க ராணுவ உளவு ஆய்வாளர் செல்சீ மேனிங் என்பவரை அணுகி சட்ட விரோதமாக ஆவணங்களை பெற்றுள்ளார்.

பிறகு அவருடன் சேர்ந்து பெண்டகன் பாஸ்வேர்டையும் ஹாக் செய்துள்ளார் இப்படியாக அவர் பல சதிவேலைகளில் ஈடுபட்டார்’ என தெரிவித்தார். பாரிஸ்டன் கூறும் ஆவணங்கள், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர் பற்றிய அமெரிக்க ராணுவ தகவல்கள் அடங்கிய ஆவணங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: