ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும் வரை போராட்டம் தொடரும் !

Saturday, January 21st, 2017

இன்னும் இரண்டொரு நாட்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுமென முதலமைச்சர் அறிவித்திருந்தாலும் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுவருபவர்கள் தங்கள் போராட்டங்களைத் தொடர்ந்து வருகின்றனர்.

முன்னதாக ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் சட்ட அமைச்சகங்கள் தங்கள் ஒப்புதலை வழங்கியுள்ளன. ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடக்க ஆரம்பித்த பிறகே தாங்கள் போராட்டத்தை விலக்கிக்கொள்வோம் என அவர்கள் கூறியிருக்கின்றனர்.

தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டுவரும் பட்சத்தில் ஜல்லிக்கட்டு நடக்கக்கூடும் என்பதால், மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தை இன்று பார்வையிட்டார்.

நேற்று தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வலியுறுத்தி மாநிலம் முழுவதும் நடைபெற்றுவரும் போராட்டங்கள் நான்காவது நாளாக தொடர்ந்து நடைபெற்ற நிலையில், போராட்டம் நடந்துவரும் சென்னை மெரீனா கடற்கரையை நோக்கி லட்சக்கணக்கான பொதுமக்கள் புறப்பட்டதால் சாலைகள் அனைத்தும் முடங்கின.

ஆனால் கடந்த மூன்று நாட்கள் இந்தப் போராட்டத்தில் காணப்பட்ட ஒழுங்கும், கட்டுப்பாடும் இன்று அவ்வளவாகக் காணப்படவில்லை.இந்தக் கூட்டத்தில் இருந்த சிலர் விரும்பத் தகாத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.

இந்த ஊர்வலங்களில் சென்ற சிலர் சாலைகளில் செல்பவர்களின் மீது தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு எறிவது, ஆபாச சொற்களைப் பேசுவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டனர். சேப்பாக்கத்திற்கு அருகில் சிலர் திடீரென பறக்கும் ரயில் சேவையின் ரயில்களை நிறுத்தினர்.

இலவசமாக அளிக்கும் உணவு பொட்டலங்களை மற்றவர்கள் மீது வீசி எறிவது, தண்ணீரை ஊற்றுவது, கோஷங்களை எழுப்பாமல் செல்பவர்களை, கோஷம் எழுப்பச் சொல்லி வற்புறுத்துவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டனர். பெரும் எண்ணிக்கையிலான காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், லட்சக் கணக்கில் பொதுமக்கள் குவியத் துவங்கியதால், அவர்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் மட்டுமே ஈடுபட்டனர்.

மதுரையில் போராட்டக்காரர்கள் வைகை நதி மீதிருக்கும் ரயில் பாலத்தை மறித்திருப்பதால் கடந்த இரண்டு நாட்களாக இரண்டு ரயில்கள் பாதி வழியில் நிற்கின்றன. மேலும் மதுரைக்கான ரயில் சேவை முடங்கியுள்ளது. மதுரைக்குச் செல்லும் ரயில்கள், மதுரை வழியாகச் செல்லும் ரயில்கள் பல ரத்துசெய்யப்பட்டுள்ளன.மதுரை விமான நிலையம் முன்பாக போராட்டங்கள் நடந்ததால், பயணிகள் விமான நிலையத்திற்குள் செல்ல முடியாமல், விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

_93679397_52fb9d8f-38c2-4ccf-813b-8fa9868b5024

Related posts: