ஜப்பானில் அணுகுண்டு வீசிய செயல் மன்னிப்பு கேட்பதற்கும் கொடுப்பதற்கும் உரிய விடயமல்ல – ஒபாமா

Tuesday, May 31st, 2016

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அணு ஆயுதம் இல்லாத உலகை உருவாக்க அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்து, ஹிரோஷிமா அமைதி நினைவுப் பூங்காவில் உருக்கமாக பேசியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதிகள் வரிசையில் வரலாறு காணாத ஒரு புதிய திருப்பம் ஒபாமா. அமெரிக்கா அணுகுண்டு வீசியதால் நாசமாய் போன ஜப்பானின் நகரங்களான ஹிரோஷிமா, நாகாசாகிக்கு இதுவரை எந்த அமெரிக்க ஜனாதிபதியும் செல்லவில்லை.

அதற்கு காரணம், தங்கள் நாட்டின் ஆட்சி நடவடிக்கைகளை தாங்களே நியாயப்படுத்துகிற செயல்! முதன்முறையாக ஒபாமா அங்கு சென்றார் அது அமெரிக்காவை புனிதப்படுத்துகிற செயல். அணுகுண்டு ஆற்றியப்பணி: 1945, ஆகஸ்ட் 6ல் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட முதல் அணுகுண்டில் 140,000 உயிர்கள் பலி, 100,000 பேர் படுகாயம்.

மூன்று நாட்கள் கழித்து நாகாசாகியில் வீசிய இரண்டாவது அணுகுண்டில் 74,000 பேர் மடிந்தனர்.

இதுபற்றி அங்கு, ஒபாமா மேலும் பேசும்போது, ”ஜப்பானில் அணுகுண்டு வீசிய செயல், மன்னிப்பு கேட்பதற்கும் கொடுப்பதற்கும் உரிய விஷயமல்ல.உலக நாடுகளும் எனது நாடும் அணு ஆயுதங்களை குவித்துள்ளன. அது அந்த நாடுகளின் தைரியத்திற்காக. அந்த தைரியம் ஏன் தேவைப்படுகிறது?

பயத்திலிருந்து தப்புவதே தைரியம் தேவைப்படுவதன் விதி. நாம் அந்த பயமே இல்லாத உலகை உருவாக்க வேண்டும் அதுவே சரியான மதி. அதற்கு அணு ஆயுதம் இல்லாத உலகை படைக்க அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும் அணு ஆயுதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

ஆனால், அமெரிக்கா அமைதியாக மூன்று தசாப்தங்களில் 1 டிரில்லியன் டொலர் செலவில் ஒரு பாரிய முயற்சியின் பகுதியாக மிக துல்லியமான சிறிய அணுகுண்டுகளை உருவாக்கி அணு ஆயுதங்களை மேம்படுத்தி வருகிறது” என்றும் கூறினார்.

தனது வலிமையை உலகுக்கு காட்டும் வேகத்தில் மாபெரும் மக்கள் அழிவையும் உணராத மரத்துப்போன மனதைத்தான் உலகம் அமெரிக்காவிடம் கண்டு வந்தது. உலகப் போர்கள் உட்பட்ட ஏனைய போர்களில் வல்லரசான அமெரிக்கா தலைமையாக தன்னை நிலைநிறுத்தியது என்பதைவிட அவ்வளவுக்கு மற்ற நாடுகளை பயமுறுத்தியது என்பதே சரி.

அமெரிக்காவால் மற்ற நாடுகளுக்கு நேர்ந்த வாழ்வைவிட அழிவே அதிகம். இந்த விஷயத்தில் அந்த நாட்டின் அத்தனை ஜனாதிபதிகளுமே ஒரே மாதிரிதான். மனசாட்சியை புறந்தள்ளிவிட்டு நாட்டின் சட்டதிட்ட அமைப்புகளில் மட்டுமே சவாரி செய்துள்ளனர்.

மறுபுறம் இங்கிலாந்து, உலகின் பெரும்பாலான நாடுகளை அடிமைப்படுத்தி, வளங்களை சுரண்டி மனிதர்களையும் வேட்டையாடியது. இதனால், வெள்ளையர் என்றாலே பெரும்பாலான மக்கள் மனங்களில், உடல் வெள்ளையாகவும் மனம் கருப்பாகவும் இருப்பவர்கள் என்ற நினைப்புதான்.

சமீபகாலமாக, பராக் ஒபாமா, ஏஞ்சலா மெர்கல் போன்ற சில மாமனிதர்கள் தன்னாட்டு மக்களை கடந்து பிறநாட்டு மக்களையும் நேசிக்கும் விதம் எல்லோர் எண்ணங்களையுமே மாற்றியுள்ளது.

இத்தனை காலமாக இந்த நாடுகள் ஏன் இவர்களைப் போன்ற மனிதர்களிடம் ஆட்சியை கொடுக்கவில்லை என்றே புலம்பத் தோன்றுகிறது. உலகை ஆள தேவை ஆயுதமல்ல, இதயம்!

Related posts: