ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மொராலிஸூக்குத் தடை!

Tuesday, November 26th, 2019

பொலிவியாவில் மக்கள் போராட்டம் காரணமாக ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்த ஈவோ மொராலிஸ், அடுத்த தேர்தலில் போட்டியிடுவதற்கு அந்நாட்டு பாராளுமன்றம் தடை விதித்துள்ளது.

பொலிவியாவில் முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்கு அனுமதி கோரும் மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

குறித்த மசோதாவில், கடந்த 14 ஆண்டுகளாக ஜனாதிபதி பொறுப்பை வகித்து வந்த ஈவோ மொராலிஸ் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த மசோதா, இடைக்கால அதிபர் ஜீனைன் ஏயெஸின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில் அவர் கையெழுத்திட்டால் அந்த மசோதா அமுலுக்கு வரும்.

இது தவிர, தேர்தலை நடத்துவதற்காக 7 உறுப்பினர்கள் அடங்கிய தேர்தல் நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டியுள்ளது. அந்த நீதிமன்றத்துக்கும் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிவியாவை கடந்த 14 ஆண்டுகளாக ஆண்டு வந்த ஈவோ மொராலிஸ், கடந்த மாதம் 20-ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றாக அறிவித்துக் கொண்டார். எனினும், அந்தத் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம் சாட்டிய அவரது எதிர்ப்பாளர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதையடுத்து, ராணுவம் கேட்டுக்கொண்டதன் பேரில் தனது அதிபர் பதவியை ஈவோ மொராலிஸ் ராஜிநாமா செய்தார். அவருக்கு தற்போது மெக்ஸிகோ அடைக்கலம் அளித்துள்ளது.

இந்த நிலையில், மறு தேர்தல் நடத்தும் வரை நாட்டின் இடைக்கால அதிபராக செனட் சபை துணைத் தலைவர் ஜீனைன் ஏயெஸ் பொறுப்பேற்றார்.

எனினும், அவரை அதிபராக ஏற்க மறுக்கும் ஈவோ மொராலிஸ் ஆதரவாளர்களுக்கும், ஜீனைன் ஏயெஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. இதில் 32 உயிரிழந்தனர். இந்தச் சூழலில், அடுத்த அதிபர் தேர்தலில் மொராலிஸ் போட்டியிடுவதற்குத் தடை விதிக்கும் மசோதா தற்போது நடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related posts: