செம்மரக் கடத்தல் வழக்கு : 97 தமிழர்களுக்கு சிறை!

Sunday, October 30th, 2016

ஆந்திர மாநில வனப்பகுதியில் சட்டவிரோதமாக செம்மரங்களை வெட்டியதாக கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 97 பேரை சிறையில் அடைக்க ஆந்திர மாநில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் கடப்பா மாவட்டத்தில் உள்ள மைதுகூர் நீதிமன்றம் முன்பாக இன்று சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டிருந்த அந்த 97 பேரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி சத்தியகுமாரி உத்தரவிட்டார்.

ஆந்திராவில் லங்கமால் பகுதியில் உள்ள நல்லமலா வனப்பகுதியில் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வெட்டிய செம்மரக்கட்டைகள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டதாகவும் ஆந்திர காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள்.

முன்னதாக சென்னைக்கு அருகில் உள்ள ரெட்ஹில்ஸ் பகுதியில் செம்மரக்கடத்தல் தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்த ஜாஹிர் என்பவரை ஆந்திர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.அவர் அளித்த தகவலை அடிப்படையாக கொண்டே இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக மைதுகூர் காவல்துறையினர் தெரிவித்தார்கள்.

ஆந்திர மாநில சிறையில் இன்று அடைக்கப்பட்டுள்ள 97 பேரும் தமிழகத்தின் வடமாவட்டப்பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இவர்கள் அனைவரும் மரம் வெட்டும் தொழிலாளிகள் என்றும், தமிழகத்தில் முகவர்களாக ஈடுபடும் ஒரு சிலர் இவர்களை அழைத்து சென்று செம்மரங்களை வெட்ட பயன்படுத்திக்கொள்வதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் உள்ள சேசாசலம் வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் குற்றவாளிகள் என்று கூறப்பட்ட 20 பேர், செம்மரக்கடத்தல் தடுப்புப் படையினரால் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இது போன்ற விவகாரங்கள் அதிக கவனத்தை ஈர்த்து வருகின்றன.

தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டின் போது, செம்மரம் வெட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 288 தமிழர்கள் இந்த ஆண்டின் துவக்கத்தில் தான் விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள்.அதன் பிறகும் கூட நூற்றுக்கணக்கான தமிழக தொழிலாளர்கள் மீண்டும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு தான் வருகிறார்கள்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியத்தோடு செயல்பட்டு வருவதாக முக்கிய எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.இன்றைய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக அரசியல் கட்சிகள், சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளன.

_92144882_1

Related posts: