சுவாதி கொலை வழக்கு: ராம்குமாரை வீடியோ எடுத்து சிசிடிவி படத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க நீதிமன்றம் உத்தரவு!

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரை ஓகஸ்ட் 8-ஆம் திகதி ஒரு நாள் மட்டும் போலீஸ் காவலில் விசாரிக்க எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் அவரை வீடியோவில் படமாக்கி, அதை சிசிடிவி படத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவும் அது உத்தரவிட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கடந்த மாதம் 24-ந் திகதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த நுங்கம்பாக்கம் போலீசார் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்பவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ராம்குமார் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ராம்குமாரை சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் ஏற்கனவே 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்நிலையில், ராம்குமாரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க கோரி சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றதில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
ராம்குமாரை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து, ஏற்கனவே கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ள காட்சிகளையும் ஒப்பிட்டு பார்க்க அனுமதி வழங்கும்படி போலீஸார் தரப்பில் கோரப்பட்டது. அந்த மனு நேற்று மாலை மாஜிஸ்திரேட்டு கோபிநாத் (பொறுப்பு) முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராம்குமாரை வீடியோ படம் எடுத்து ஆய்வு செய்வதற்கு அவரது வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டனர்.
இந்த விசாரைணையின் முடிவில், ஆக.8-ந் திகதி அன்று சிறையில் இருந்து ராம்குமாரை அழைத்து வந்து இரகசிய இடத்தில் வைத்து வீடியோ படம் மற்றும் புகைப்படம் எடுக்க மாஜிஸ்திரேட்டு கோபிநாத் அனுமதி வழங்கினார். ராம்குமாரின் புகைப்படம், வீடியோ மற்றும் ஏற்கனெவே கண்காணிப்பு கமராவில் பதிவாகியிருந்த காட்சி ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக தடய அறிவல் துறைக்கு அவைகள் அனுப்பி வைக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.
மேலும், ராம்குமாரின் கையெழுத்தை பரிசோதித்து பார்க்க போலீசார் நீதிமன்றத்தில் அனுமதி கோரினர்.அதற்காக அனுமதி பின்னர் தனியாக வழங்கப்படும் என தெரிகிறது.இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக கொளஞ்சிநாதன் ஆஜரானார்.இது குறித்து ராம்குமாரின் வழக்கறிஞர் குருமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியபோது,ராம்குமாரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்தார்.
Related posts:
|
|