சுகாதார கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு தண்டனை – அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்!

Saturday, September 5th, 2020

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சுகாதார கடப்பாடுகளை மீறுபவர்களுக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி, முகக்கவசம் அணியாதவர்கள், தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவர்கள் மற்றும் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் அல்லது அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனை விதிக்கப்பட உள்ளது.

அதுமட்டுமல்லாது, நோய்ப் பரவலுக்கு காரணமானவர்கள் மீது சம்பந்தப்பட்ட இடத்திலேயே நடவடிக்கை எடுக்க மாநகராட்சி, சுகாதாரத்துறை, காவல்துறை என பல்வேறு தரப்பினருக்கும் அவசரச் சட்டத்தின் வாயிலாக அதிகாரம் வழங்கப்படும் என அரசு உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, பொது முடக்கம் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற முன்னெச்சரிக்கை விதிகளைப் பின்பற்றுமாறு தொடர் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனினும், ஒரு சில தரப்பினர் அந்த விதிகளைப் பின்பற்றாமல் நோய் பரவலுக்கு காரணமாக அமைந்து வருகினர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டே விதிகளை மீறுபவர்கள் மற்றும் தாக்குதல்களில் ஈடுபடுவோர்மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் பொது சுகாதாரச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அரசு முடிவு செய்தது.

அதுதொடர்பாக முன்மொழியப்பட்ட சட்டத்திருத்த விதிகளைப் பரிசீலித்த ஆளுநர், அந்த அவசர சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழகத்தில் இதுவரை ஏறத்தாழ 4.5 இலட்சம் பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: