சி.ஐ.ஏவின் உளவுக் கருவிகள் தொடர்பில் தகவல் வெளியிட்ட விக்கிலீக்ஸ்!

Thursday, March 9th, 2017

அமெரிக்க அரசின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ பயன்படுத்தியதாக சொல்லப்படும் பல வகையான கணினி அமைப்புகளை ஊடுருவும் சாதனங்களின் தகவல்களை விக்கிலீக்ஸ் ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

கணினி வலையமைப்பு ஊடுருவும் ஆயுதங்கள் என குற்றஞ்சாட்டப்படும் இதில் விண்டோஸ், ஆண்ட்ராய்ட், ஐ ஓ எஸ், ஒ எஸ் எக்ஸ் மற்றும் லினெக்ஸ் கணினிகள் மற்றும் இணையதள ரவுட்டர்களை குறிவைக்கும் தீய மென்பொருட்களும் அடக்கும்.

சில மென்பொருட்கள் உள்நாட்டிலே தயாரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ஐக்கிய இராஜ்ஜியத்தின் எம் ஐ 5 உளவு நிறுவனம், சாம்சங் தொலைக்காட்சிகளில் பயன்பாட்டாளுருக்கு தெரியாமல் மென்பொருள் ஒன்றை கட்டமைக்க உதவியதாக கூறப்படுகிறது.

இருந்தும் இந்த தகவல்களை சி.ஐ.ஏவின் பேச்சாளர் உறுதிப்படுத்தவில்லை.

அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏவின் கணினி ஊடுருவும் திறன்கள் அதற்கு வழங்கப்பட்டுள்ள கட்டாய அதிகாரங்களை மீறி செயல்படுகிறதா என்ற விவாதத்தை தூண்ட வேண்டும் என்ற நோக்கில் இந்த தகவல்களை தங்களிடம் ஒருவர் பகிர்ந்துக் கொண்டதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

ஊடுருவப்பட்ட தொலைக்காட்சிகள்

ஜூன் 2014 ஆம் ஆண்டு என்று தேதி குறிப்பிடப்பட்ட ஒரு ஆவணத்தில் இடம்பெற்றுள்ள தகவலின்படி, சாம்சங் நிறுவனத்தின் எஃப் 8000 ரக ஸ்மார்ட் தொலைக்காட்சிகளை ஊடுருவும் திட்டத்திற்கு வீப்பிங் ஏஞ்செல் என ரகசிய பெயர் சூட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

பயன்பாட்டாளர்களை முட்டாளாக்க, தொலைக்காட்சியை உண்மையிலே நிறுத்திவிட்டோம் என்பதை அவர்கள் நம்பவைக்க போலியான ‘ஆஃப்’ மோட் ஒன்று உருவாக்கப்பட்டதாக அந்த ஆவணம் விவரிக்கிறது.

மேலும், விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்களில், பாதிக்கப்பட்ட தொலைக்காட்சி கருவிகள் இரகசியமாக ஒலிகளை பதிவு செய்யும்படி வடிவமைக்கப்பட்டதாகவும்,

பின்னர் தொலைக்காட்சி ஆன் செய்யப்பட்டவுடன் அதில்  இரகசியமாக பதிவான ஒலிகள் அனைத்து சி.ஐ.ஏவின் கணினி சர்வர்களுக்கு இணையதளம் மூலம் சென்றுவிடும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த ஆவணங்கள் குறித்து இன்னும் சாம்சங் கருத்து தெரிவிக்கவில்லை.

கடந்த ஆண்டு சி.ஐ.ஏ ஜீரோ டேஸ் என்ற 24 ஆண்ட்ராய்ட்  இரகசிய ஆயுதங்களை உருவாக்கியதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

அதில், சில சி ஐ ஏவால் உள்நாட்டிலே தயாரிக்கப்பட்டதாகவும், ஆனால் பிற மென்பொருட்கள் ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள அரசாங்க தொடர்புத்துறை தலைமையக நிறுவனம் மற்றும் என் எஸ் ஏ மற்றும் பெயரிடப்படாத மூன்றாம் தரப்பினர் ஆகியோரிடமிருந்து பெறப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

இதன் விளைவாக உற்பத்தி செய்யப்படும் கருவிகளில், சாம்சங், எச் டி சி மற்றும் சோனி நிறுவனங்கள் தயாரித்த கருவிகள் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்யப்பட்டு சந்தையில் உள்ள பிற மெசெஜ் சேவைகளை காட்டிலும், வாட்ஸ் ஆப், சிக்னல், டெலிகிராம் மற்றும் வீபோ ஆகிய சேவைகளில் பரிமாறப்படும் மெசேஜ்களை படிக்க சி.ஐ.ஏவை அனுமதிக்கிறது.

ஐ ஃபோன் மற்றும் ஐ பேட் பயன்பாட்டாளர்களின் இடங்களை சி.ஐ.ஏ துள்ளியமாக கண்டறிவது, கருவிகளை கேமரா மற்றும் மைக்ரோ ஃபோன் ஆகியற்றை பயன்பாட்டாளருக்கு தெரியமாலே ஆன் செய்வது மற்றும் அதில் வரும் தகவல்களை படிக்க சி.ஐ.ஏ நிறுவனம் ஒரு சிறப்பு குழுவை அமைத்துள்ளதாக ஆவணம் கூறுகிறது.

வாகனங்களின் கணினி கட்டுப்பாட்டு அமைப்புகளை பாதிக்க சி ஐ ஏ முயற்சித்து வந்ததாகவும், யாரும் கண்டுபிடிக்க முடியாத படுகொலைகளுக்கு இதனை பயன்படுத்தியிருக்கலாம் என்றும் விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.

இணையம் அல்லது பாதுகாப்பற்ற வலையமைப்பில் இணைக்கப்படாத கணினிகளை ஊடுருவ வழிமுறைகளை சி.ஐ.ஏ கண்டுபிடித்துள்ளதாகவும், பிரபலமான ஆன்டி-வைரஸ் மென்பொருட்களை எதிர்க்கும் தாக்குதல்களை மேம்படுத்தியுள்ளதாகவும் விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.

ரஷ்யா மற்றும் வேறுபிற இடங்களிலிருந்து திருடப்பட்ட தீய மென்பொருளை வைத்து தனி லைப்ரரி ஒன்றை சி.ஐ.ஏ உருவாக்கி உள்ளதாக விக்கிலீக்ஸ் கூறுகிறது.

சி.ஐ.ஏவின் இணையம் சார்ந்த செயல்பாடுகள் குறித்த ரகசிய தகவல் கசிவை வால்ட் 7 என்று விக்கிலீக்ஸ் பெயரிட்டுள்ளது. திட்டமிடப்பட்டுள்ள கசிவுகளின் தொடரின் முதலாவது பகுதி இது என்று விக்கிலீக்ஸ் கூறியுள்ளது

Related posts: