சிரியாவில் யுத்த நிறுத்தம் – பிரதான மோதல் பகுதிகளில் அமைதி!

Wednesday, September 14th, 2016

சிரியாவில் கடந்த திங்கட்கிழமை சூரிய அஸ்தமனத்துடன் அமுலுக்கு வந்த தேசிய அளவிலான யுத்த நிறுத்தம் வலுவாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவித்துள்ளன.

யுத்த நிறுத்தம் அமுலுக்கு வந்த முதல் 15 மணி நேரத்தில் சிவிலியன்களின் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என்று பிரிட்டனை தளமாகக் கொண்டு இயங்கும் சிரிய மனித உரிமைக் கண்காணிப்புக் குழு குறிப்பிட்டுள்ளது.

தாக்குதல்களுக்கு இலக்காகி வந்த வடக்கு நகர் அலெப்போவிலும் அமைதி நிலவியது. முஸ்லிம்களின் புனித ஹஜ் பெருநாளுடனேயே சிரியாவில் யுத்த நிறுத்தமும் அமுலுக்கு வந்துள்ளது.

எவ்வாறாயினும் யுத்த நிறுத்தத்தை மீறி இடைக்கிடை தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பதாக சில செய்திகள் குறிப்பிடுகின்றன. இதன்போது அரச படை மற்றும் கிளர்ச்சியாளர்கள் என இரு தரப்பும் இவ்வாறு தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன.

ஹமா மாகாணத்தின் சில கிராமங்களில் வான் தாக்குதல்கள் இடம்பெற்றதாகவும், டமஸ்கஸுக்கு அருகில் ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சிரியா எங்கும் ஏழு தினங்களுக்கு இந்த யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப்படும் என்று சிரிய இராணுவம் குறிப்பிட்்டுள்ளது. எனினும் ஆயுதக் குழுகளால் யுத்த நிறுத்தம் மீறப்படும் பட்சத்தில் அதற்கு பதில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி பஷர் அல் அஸாத்தின் இராணுவம் கூறியுள்ளது.

இந்த யுத்த நிறுத்தத்தை பல்வேறு அரச எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களும் வரவேற்றபோதும் அதனை அமுல்படுத்துவது குறித்து சந்தேகத்தை வெளியிட்டிருந்தனர்.

இந்த யுத்த நிறுத்தத்தை, “ஒன்றுபட்ட சிரியாவை பாதுகாப்பதற்கான கடைசி வாய்ப்பாக” இருக்கும் என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி வர்ணித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் பல மாதங்கள் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னரே கடந்த வெள்ளிக்கிழமை ஜெனீவாவில் ஏற்பட்ட உடன்பாட்டை அடுத்து யுத்த நிறுத்தம் அமுலுக்கு வந்தது. இதன்போது முற்றுகை பகுதிகளுக்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி செல்ல இரு தரப்புக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

உக்கிர மோதல் இடம்பெற்ற அலெப்போ உட்பட மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளுக்கு உதவிகளை விநியோகிக்க மனிதாபிமான குழுக்கள் எதிர்பார்த்துள்ளன.

ஏழு தினங்களுக்கும் யுத்த நிறுத்தம் அமுலில் இருக்கும் பட்சத்தில், அமெரிக்கா மற்றும் ரஷ்யா கூட்டாக இணைந்து இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்), ஜபத் பத்தாஹ் அல் ஷாம் (அண்மையில் பெயரை மாற்றிய அல் நுஸ்ரா) உட்பட ஆயுதக் குழுக்கள் மீது தாக்கதல்களை நடத்த எதிர்பார்த்துள்ளது.

இந்த யுத்த நிறுத்தத்திற்கு சாதகமான ஒத்துழைப்புகளை வழங்குவதாக அறிவித்திருக்கும் அரச எதிர்ப்பு சுதந்திர சிரிய இராணுவ குழு, இது அரசுக்கு சாதகமாக அமையும் என்பது குறித்து அவதானத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

கடும்போக்கு இஸ்லாமியவாத கிளர்ச்சி குழுவான அஹரார் அல் ஷாம் இந்த யுத்த நிறுத்தத்தை ஆரம்பத்தில் நிராகரித்தபோதும் பின்னர் அதன் நிலைப்பாட்டில் இளகிய போக்கு ஏற்பட்டுள்ளது.

அஹ்ரார் அல் ஷாம் உட்பட பலம்மிக்க கிளர்ச்சியாளர்கள் யுத்த நிறுத்தத்திற்கு ஆதரவளிப்பது அது வலுப்பெற வாய்ப்பை ஏற்படுத்தும் என்று அவதானிகள் நம்புகின்றனர்.

மறுபுறம் ஜனாதிபதி அஸாத், இந்த உடன்பாட்டை வரவேற்றிருக்கும் அதேநேரம், “தீவிரவாதிகளிடம் இருந்து அனைத்து பகுதிகளையும் மீட்டு அவைகளை மீள கட்டியெழுப்ப” சிரிய அரசு உறுதி கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஜனாதிபதி பஷர் அல் அஸாத்திற்கு எதிரான மக்கள் எழுச்சி போராட்டமாக ஆரம்பமாக சிரிய யுத்தத்தில் கால் மில்லியனுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். 4.8 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வெளி நாடுகளில் தஞ்சடைந்திருப்பதோடு மேலும் 6.5 மில்லியன் மக்கள் நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்து வாழ்கின்றனர்.

Untitled-1 copy

Related posts: