சிரியாவில் மீண்டும் உதவி கொண்டுசெல்ல ஐ.நா தயார்!

சிரியாவுக்கான மனிதாபிமான உதவி விநியோகங்களை இடைநிறுத்திய ஐ.நா அதனை மீண்டும் ஆரம்பிக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை உதவி வாகன தொடரணி மீது வான் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்தே ஐ.நா உதவிகளை இடை நிறுத்தியது.உதவி லொரி வண்டிகள் சில பகுதிகளுக்கு அவதானத்துடன் பயணத்தை ஆரம்பித்திருப்பதாக சிரியாவுக்கான ஐ.நா விசேட தூதுவர் ஸ்டீபன் டி மிஸ்டுரா குறிப்பிட்டுள்ளார்.
மறுபுறம் சிரியாவின் முக்கிய பகுதிகளில் தரையில் நிறுத்தப்பட்டிருக்கும் அனைத்து விமானங்களும் யுத்த நிறுத்தத்தை பாதுகாக்க வேண்டும் என்று அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
சிரிய யுத்த நிறுத்தம் குறித்த சர்வதேச நாடுகள் நியூயோர்க்கில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சிரியா தொடர்பிலான சர்வதேச குழுவில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்ளடங்குகிறது.சிரியாவில் அமுலுக்கு வந்த பலவீனமான யுத்த நிறுத்தத்தில் முற்றுகையில் சிக்கியிருக்கும் மக்களுக்கு உதவிகள் விநியோகிப்பது பிரதாக அம்சமாக உள்ளது. இந்நிலையில் உதவி வாகனங்கள் விரைவில் பயணத்தை ஆரம்பிக்கும் என்று ஐ.நா மனிதாபிமான இணைப்பகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை சிரியாவில் உதவி பொருட்களை எடுத்து சென்ற வாகனத் தொடரணியின் மீது நடந்த தாக்குதலால் எழுந்த மோதல்கள் குறித்து ஐ.நா பாதுகாப்பு சபை கூட்டத்தில், அமெரிக்கா மற்றும் ரஷ்யா கசப்புடன் குற்றச்சாட்டுகளைப் பரிமாறிக் கொண்டன.உதவி பொருட்களை எடுத்து சென்ற இந்த வாகனத் தொடரணியின் மீது ரஷ்யாதான் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது என்று அமெரிக்கா கருதுகிறது. ஆனால், இதனை ரஷ்யா மறுத்துள்ளது. இத்தாக்குதல் குறித்து ரஷ்யாவின் விளக்கங்கள் மாறி வருவது குறித்து, ராஜதந்திர உறவுகள் தொடர்பான கட்டுப்பாடுகளை தூக்கி எறிந்து, ரஷ்யாவின் விளக்கங்கள் குறித்து அமெரிக்க அரசின் இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி கேலி செய்துள்ளார்.
இத்தாக்குதல் குறித்து எழுந்த உணர்வுரீதியான கருத்துக்களை வெளிப்படுத்தவேண்டாம் என்று அறிவுறுத்திய, ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ் சாத்தியமாகக்கூடிய பல விளக்கங்களை பட்டியலிட்டு வாதிட்டுள்ளார்.
Related posts:
|
|