சிரியாவில் இருந்து ரஷ்ய ராணுவத்தை வெளியேற அதிபர் புதின் உத்தரவு

Tuesday, March 15th, 2016

சிரியாவில் அதிபர் ஆசாத் பதவி விலக வேண்டும் என்று கிளர்ச்சியாளர் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதன் காரணமாக ஆசாத் படையினருக்கும் கிளர்ச்சியாளருக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பும் நாச வேலைகளில் ஈடுபட்டு வருவதால் அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ படையினர் தாக்குதலில் இறங்கினர்.அதே போல் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யாவும் போரில் குதித்தது. உள்நாட்டு போர் காரணமாக பல்வேறு மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சமடைந்தனர்.

இந்நிலையில் தற்போது அங்கு போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து ஜெனிவாவில் சிரிய அரசு மற்றும் கிளர்ச்சியாளர்கள் இடையே சமாதான பேச்சு வார்த்தைகளுக்கு முயற்சி நடந்து வருகிறது.

இந்நிலையில் சிரியாவில் உள்ள பெரும்பாலான ரஷ்ய படையை நாடு திரும்பும்படி அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக புதின்கூறியதாவது:-

நமது ராணுவ அமைச்சகத்துக்கும் படைகளுக்கும் கொடுக்கப்பட்ட பணியை நாம் சிறப்பாக நிறைவேற்றியுள்ளோம். இதனால் சிரியாவில் உள்ள நமது ராணுவத்தின் முக்கிய படைகளை நாடு திரும்பும்படி நான் உத்தரவிடுகிறேன். அதே நேரத்தில் அங்கு உள்ள விமான தளம் மற்றும் கப்பல் தளம் அங்கேயே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த முடிவுக்கு சிரிய கிளர்ச்சியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: