சிரியாவில் இரசாயன தாக்குதல்!

Friday, April 7th, 2017

வடமேற்கு சிரியாவின் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதி மீது நடத்தப்பட்ட இரசாயன தாக்குதல் என சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் குறைந்தது100 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

கான் ஷெய்கவுனில் சிரிய அரசு அல்லது ரஷ்ய போர் விமானம் நடத்திய இந்த தாக்குதலில் பலரும் மூச்சடைப்புக்கு உள்ளாகி இருப்பதாக சிரிய மனித உரிமை கண்காணிப்புக் குழு குறிப்பிட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கானோரின் படங்களை வெளியிட்டிருக்கும் உள்ளுர் அரச எதிர்ப்பு செயற்பாட்டாளர்கள் மற்றும் செய்தித் தளங்கள், மூச்சுத் திணறலால் உயிரிழப்பு நேர்ந்திருப்பதாக தகவல் அளித்துள்ளனர்.

இரசாயன தாக்குதல் நடத்துவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை சிரிய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

எனினும் ஐக்கிய நாடுகள் மற்றும் இரசாயன அயுத தடுப்பு அமைப்பு மேற்கொண்ட விசாரணை முடிவு கடந்த ஒக்டோபரில் வெளியானபோது, சிரிய அரசு 2014 மற்றும் 2015 காலப்பகுதியில் குறைந்தது மூன்று தடவைகள் குளோரினை ஓர் ஆயுதமாக பயன்படுத்தியது உறுதியானது.

இதில் இஸ்லாமிய அரசு குழுவும் இரசாயன ஆயுதத்தை பயன்படுத்துவதாக அந்த விசாரணை முடிவு கூறியது.

நேற்று அதிகாலை இடம்பெற்ற தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மயக்கம், வாந்தி மற்றும் வாயில் நுரை கக்கும் அறிகுறிகளை காட்டுவதாக கான் ஷெய்கவுன் மருத்துவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி சிரிய கண்காணிப்பாளர்கள் தகவல் அளித்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என்பதோடு ஒன்பது சிறுவர்களும் அடங்குகின்றனர்.

தாக்குதலுக்கு இலக்கான மக்கள் சிகிச்சை பெறுவதன் பெரும் எண்ணிக்கையிலான புகைப்படங்களை அரச எதிர்ப்பு ஆதரவு எட்பில் மருத்துவ மையம் வெளியிட்டுள்ளது. இந்த படங்களில் ஏழு சிறுவர்களின் சடலங்கள் பிக்கப் வண்டிக்கு பின்னால் எற்றப்பட்டிருப்பதை காண முடிகிறது.

எனினும் அந்த புகைப்படங்களின் உண்மைத் தன்மை குறித்து உடன் உறுதி செய்ய முடியவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த வான் தாக்குதல் இடம்பெற்றிருக்கும் இத்லிப் மாகாணம் அல் கொய்தாவுடன் தொடர்புபட்ட ஜிஹாதி குழு, ஹயாத் தஹ்ரிர் ஷாம் மற்றும் கிளர்ச்சியாளர் கூட்டணி ஒன்றின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த பிராந்தியம் சிரிய அரசு மற்றும் அதன் நெருங்கிய நட்பு நடான ரஷ்யாவினால் அடிக்கடி இலக்காகி வருவதோடு இங்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையும் இஸ்லாமிய அரசுக்கு எதிராக வான் தாக்குதல்களை நடத்துகிறது.

Related posts: