சவுதி அரேபியாவில் வேலையிழந்து நிர்க்கதியான இந்தியர்கள் நாடு திரும்ப சுஷ்மா சுவராஜ் அழைப்பு!

Wednesday, August 24th, 2016

வளைகுடா நாடான சவுதி அரேபியாவில் வேலையிழந்து, வறுமையில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டுமென்று இந்திய வெளியுறத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

தனது ட்விட்டர் வலைத்தளத்தில், சவுதி அரேபியாவில் வாடும் இந்தியர்கள் குறித்து சுஷ்மா சுவராஜ் செய்தி வெளியிட்டுள்ளார்.

“சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கைகளை அங்குள்ள தூதரகத்தில் பதிவு செய்துவிட்டு, உடனடியாக நாடு திரும்பவேண்டும். அவர்களின் பயணச் செலவுகளை இந்திய அரசு ஏற்கும்.” என்று தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவில் மூடப்பட்ட நிறுவனங்களுடனான அந்நாட்டு அரசின் பேச்சுவார்த்தை நடத்து முடிந்த பிறகு தொழிலாளர்களின் சம்பள நிலுவை பிரச்சினை தீர்த்து வைக்கப்படும்.

பிரச்சனை தீராத போது, அங்கு காத்துக் கொண்டிருப்பதில் பலனில்லை என்று தெரிவித்துள்ள சுஷ்மா, வரும் செப்டம்பர் 25-ஆம் திகதிக்குள், சவுதி அரேபியாவில் தவித்து வரும் இந்தியர்கள் தங்களின் கோரிக்கைகளை இந்திய தூதரகத்தில் பதிவு செய்து விட்டு நாடு திரும்ப வேண்டுமென்றும், செப்டம்பர் 25-ஆம் திகதிக்குள் நாடு திரும்பாதவர்கள் தங்களின் தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து செலவுகளை அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு சரிவு ஏற்பட்டுள்ளதால், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் பொருளாதாரம் அண்மை காலமாக பாதிப்படைந்து வருகிறது. இக்காரணத்தால், இங்கு பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான இந்திய தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. சில நிறுவனங்கள் தற்போது படிப்படியாக மூடப்பட்டுள்ளதால், அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.

தங்களின் பணியினை இழந்த இந்தியர்கள் பசி, பட்டினியில் வாடி வருகின்றனர். மேலும், நாடு திரும்ப முடியாமலும் அவர்கள் தவித்து வருகின்றனர். பசியால் தவித்து வரும் இந்தியர்களுக்கு, சௌதியில் உள்ள இந்திய தூதரகம் மூலம் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.

Related posts: